Ad Widget

முல்லைத்தீவு கிராம மக்களுக்கு சொந்தமான நிலங்கள் மீது தொடரும் ஆக்கிரமிப்பு!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் எல்லையில் உள்ள தமிழ் கிராமமான கொக்குத்தொடுவாய் கிராமத்தின் தமிழ் மக்களுக்கு சொந்தமான பல நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை சுவீகரிக்கும் நோக்கோடு அளவீடுகளை செய்து காணிகளுக்கு நடுவே எல்லை கற்கள் நாட்டப்பட்டுள்ளதாக கொக்குத்தொடுவாய் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நில அளவை திணைக்களம் காணி உரிமையாளர்களான பொதுமக்களுக்கும் தெரியப்படுத்தாது திருட்டுத்தனமான முறையில் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்குள் எல்லை கற்களை நாட்டி இவ்வாறு காணி அளவீடுகளை செய்திருப்பது தமது பூர்வீக விவசாய வாழ்வாதார நிலங்களை ஆக்கிரமித்து சிங்கள மயப்படுத்தும் நோக்கமே என கொக்குத்தொடுவாய் கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இவ்வாறு எல்லை கற்கள் நாட்டப்படுள்ள பகுதியான கொக்குத்தொடுவாய் சூரியனாறு பகுதிக்கு இன்றைய தினம் (20-03-2023) முன்னாள் மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனோடு சென்ற கொக்குத்தொடுவாய் விசாவசாயிகள் தமது விவசாய நிலங்கள் எல்லைகற்கள் இடப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கொக்குத்தொடுவாயின் கோட்டைக்கேணி தொடக்கம், கொத்தியகாடு, குஞ்சுக்கால்வெளி ,வெள்ளக்கல்லடி ,மணலிறக்கம் ,கூமாரிக்கண்டல், இறம்பைவெளி, எரிஞ்சகாடு, கொக்குமோட்டை , சூரியனாறு, கன்னாட்டி , அக்கரைவெளி, மாரியாமுனை உள்ளடங்களான பகுதிகளில் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய மூன்று கிராம தமிழ் மக்களுக்கு சொந்தமான 1500 ஏக்கருக்கு மேற்பட்ட மேட்டு விவசாய காணிகள் காணப்படுகின்றன.

இந்த பகுதிகளில் உள்ள மேட்டு நிலங்களை ஆக்கிரமிக்கும் நோக்குடன் இவ்வாறு எல்லை கற்கள் நாட்டப்பட்டுள்ளதாக கொக்குத்தொடுவாய் கிராம விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

1984 ஆம் ஆண்டு இந்த மூன்று தமிழ் கிராமங்களான கொக்கிளாய் ,கொக்குத்தொடுவாய் , கருநாட்டுக்கேணியை சேர்ந்த மக்கள் முற்றாக வன்முறை மூலம் வெளியேற்றப்பட்ட பின்னர் இந்த கிராம மக்களுக்கு சொந்தமான மூன்று நீர்ப்பாசன குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டு அந்த குளங்களுக்கு கீழுள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான விவசாய நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு சிங்கள மக்களுக்கு பயிர் செய்ய அபகரிக்கப்பட்டு வழங்கப்படுள்ளன.

இந்நிலையில் மீதமாகவுள்ள மேட்டு விவசாய மானாவாரி நிலங்களையும் விட்டுவைக்காமல் வனஜீவராசிகள் திணைக்களம், தொல்லியல் திணைக்களம், வன திணைக்களம், மகாவலி அதிகாரசபை உள்ளிட்ட திணைக்களங்கள் மூலம் தொடர்ச்சியாக தமது மிகுதி நிலங்களும் பறிக்கப்பட்டு வருவதாக இப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Related Posts