முல்லைத்தீவு இளைஞன் உயிரிழப்பு : கைதான 4 இராணுவ வீரர்களுக்கும் விளக்கமறியல்

முல்லைத்தீவு, முத்தையன்கட்டு குளத்தில் சடலமாக மீட்கப்படட இளைஞனின் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நான்கு இராணுவ வீரர்களும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (26) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட பதில் நீதிபதி முன்னிலையில் குறித்த 4 இராணுவ வீரர்களும் நேற்று ஆஜர்படுத்தப்பட்டபோதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், அடையாள அணிவகுப்பிற்குட்படுத்தப்பட்ட போது, அவர்களில் இருவரை சாட்சிகள் அடையாளம் காட்டியுள்ளனர்.

முத்தையன்கட்டு இராணுவ முகாமிற்குள் இராணுவத்தினர் சிலர் இளைஞர்களை அழைத்துள்ளதாகவும் பின்னர் அங்கு சில இராணுவத்தினர் அந்த இளைஞர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டதாகவும் இதனையடுத்து அங்கிருந்து இளைஞர்கள் தப்பியோடியுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காணாமல்போன நிலையில், பின்னர் முத்தையன்கட்டு குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இந்த சம்பவத்தில் 32 வயதுடைய எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் என்பவர் உயிரிழந்திருந்தார்.

குறித்த இளைஞரின் மரணம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், சார்ஜன்ட் உள்ளிட்ட 4 இராணுவத்தினரைக் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts