முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தி, மது அருந்தியது மாத்திரமின்றி ஊடகவியலாளர் ஒருவர் மீதும் தாக்குதல் நடத்திய சம்பவமொன்று செவ்வாய்க்கிழமை (7) இரவு பதிவாகியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராமத்தில் மாங்குளம் வட்டார வன வள திணைக்கள அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் வசித்து வருகின்றார்.
இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வன அதிகாரி உள்ளிட்ட மேலும் சில ஊழியர்கள் வருகைதந்து குறித்த அதிகாரியின் வீட்டில் மது விருந்தில் ஈடுபட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வன வள திணைக்களத்தினரின் ஆதரவுடன் சட்டவிரோத மணல் அகழ்வு காடழிப்பு செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் நிலையில் இவை அதிகாரிகள் இலட்சம் பணத்தொகைகளைப் பெற்றுக்கொண்டு இந்த செயற்பாடுகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் சட்டவிரோத மணல் மாபியாக்கள் மரக்கடத்தல்காரர்களால் இவ்வாறு மது விருந்துகளும் ஏற்பாடு செய்யப்படுவதாக தொடர்ச்சியாக தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.
மது விருந்துக்காக அரச வாகனங்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில் பனிக்கன்குளம் சந்தி பகுதியில் குறித்த இரண்டு வாகனங்களும் சுமார் மூன்றரை மணித்தியாலங்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த இடத்துக்கு ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் சென்றபோது குறித்த பகுதியில் மதுபோதையில் நின்ற மாவட்ட வன வள திணைக்கள அதிகாரி உள்ளிட்ட குழுவினர் ஊடகவியலாளருடன் முரண்பட்டுள்ளனர்.
அது மாத்திரமின்றி மாவட்ட வன வள திணைக்கள அதிகாரி ஊடகவியலாளரை தாக்க முற்பட்டதோடு, “இடம் தெரியாமல் மோதுகிறார்” எனவும் மிரட்டல் விடுத்தார்.
இந்நிலையில் ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனால் அரச வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தி மது அருந்தும் செயற்பாட்டை முன்னெடுத்தது மாத்திரமின்றி ஊடகவியலாளரை தாக்க முற்பட்டு அச்சுறுத்தியமை தொடர்பில் உடனடியாக மாங்குளம் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டது.
அரச வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தி மது அருந்திய விடயத்தை மாவட்ட அரசாங்க அதிபருக்கும் ஊடகவியலாளர் தெரியப்படுத்தினார்.
மேலும், வட மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கும் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வர தாமதமான நிலையில் அந்த முல்லைத்தீவு மாவட்ட வன அதிகாரி உள்ளிட்ட குழுவினர் குறித்த பகுதியை விட்டு தப்பிச் சென்றனர்.
அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வருகைதந்த மாங்குளம் பொலிஸார் ஊடகவியலாளரை, மாங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு சென்று முறைப்பாடு பதிவு செய்யுமாறு தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து ஊடகவியலாளர் மாங்குளம் பொலிஸ் நிலையம் சென்றபோது வாகனத்தில் வருகைதந்த வன வள திணைக்கள அதிகாரிகள் பொலிஸ் நிலையம் சென்று ஊடகவியலாளருக்கு எதிராக முறைப்பாடு ஒன்றை பதிவு செய்தனர்.
இவ்வாறான நிலையில் மாங்குளம் பொலிஸ் நிலைய பதவி நிலை அதிகாரி ஒருவர் வன வள திணைக்கள அதிகாரிகளிடம் எதுவுமே பேசாது ஊடகவியலாளரை மாத்திரம் அழைத்து கடும் தொனியில் மிரட்டும் வகையில் “தேவையில்லாமல் பிரச்சினைகள் போடக்கூடாது, ஊடகவியலாளர் என்றால் எதுவும் செய்வீரோ” எனவும் தகாத சொற்களை பிரயோகித்து அச்சுறுத்தி, “பிரச்சினைகள் போட்டால் உமது ஊடக அடையாள அட்டையையும் இல்லாமல் செய்வேன்” என மிரட்டி விட்டுச் சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து வேறு ஒரு பொலிஸ் அதிகாரி முறைப்பாட்டினை பதிவு செய்தார். அவரிடம், மதுபோதையில் அதிகாரிகள் உள்ளனர், அதனை பரிசோதனை செய்யுமாறு கோரியபோதும் அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அரச வாகனங்களை தவறாக பயன்படுத்தி மதுபோதையில் இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காது ஊடகவியலாளர் மீது பொலிஸார் மிரட்டல் விடுத்தமையானது இவர்கள் அனைவரும் இணைந்தே சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளுக்கு துணை போகின்றனர். இதனாலேயே இவ்வாறு நடந்துகொள்கின்றனர் என ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளர் மாவட்ட செயலாளர் மனித உரிமைகள் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு உள்ளிட்ட தரப்புக்களிடம் முறைப்பாடு அளிக்கவுள்ளார்.
இந்த முறைப்பாடு தொடர்பில் புதன்கிழமை (8) நண்பகல் 12 மணிக்கு விசாரணைக்காக இரண்டு தரப்பினர்களும் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.