Ad Widget

முல்லைத்தீவில் தொடர்ந்தும் கடல் கொந்தளிப்பு

kattuமுல்லைத்தீவில் தொடர்ந்தும் காற்றழுத்த நிலை காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு உள்ளிட்ட வடக்கு பகுதிகளில் கடல் கொந்தளிப்பு காணப்படும் எனவும் கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவும் எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

காற்றின் வேகம் கிலோ மீற்றருக்கு 80ற்கும் மேலிருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்துவருகிற அதேவேளை கடலும் பேரலைகளுடன் நிலப்பகுதியுள் சிலமீற்றர் தூரம் முன்நகர்ந்துள்ளது.

இத்திடீர் காலநிலை மாற்றம் குறித்து முல்லை மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவால் முல்லைக்கரையோரம் உள்ள மக்களிடம் விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொக்கிளாய் தொடக்கம் மாத்தளன் வரையான கரையோரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கரையோரத்திலிருந்து 100 மீட்டர் தூரத்திற்கப்பால் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

முல்லைக் கரையோர மீனவர்களுக்கும் அவர்கள் உடைமைகளைப் பாதுகாக்கும் நோக்கிலான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை, வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவின் கரையோரப்பகுதிகளுக்கு நேரில் சென்று மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி அனர்த்த நிலைமையை பார்வை செய்து வருகிறார்.

கடற்கரையோரப் பகுதிகளில் தற்சமயம் மழை குறைந்துள்ளபோதும் கடல்நிலைமை இன்னும் சீரடையவில்லை என்று அவர் தெரிவித்தார்.

Related Posts