Ad Widget

முல்லைத்தீவில் கிராம அலுவலகருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழு நடவடிக்கை

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தைச் சேர்ந்த கிராம அலுவலகர் ஒருவர் முன்னாள் போராளி மற்றும் பொதுமகன் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட அசாதரண முறை குறித்து மனித உரிமை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

பணியிலிருந்த கிராம அலுவலகர் துணுக்காய் பிரதேச செயலகத்திற்கு இணைக்கப்பட்டு ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய காரியாலயத்தில் கடந்த மாதம் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இம் முறைப்பாடு தொடர்பில் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை மேற்கொண்டிருந்ததுடன் இரண்டிற்கு மேற்பட்ட தடவைகள் நேரடி விசாரணைகளை நடத்தியது.

அதிகார துஷ்பிரயோகம், தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு மற்றும் பழிவாங்கல், அரச நிவாரணத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதுடன் இம் முறைப்பாட்டாளர்கள் அவற்றை நிரூபிப்பதற்கு சாதகமான சான்று, ஆவணங்களையும் சமர்ப்பித்திருந்தனர்.

அதன் அடிப்படையில் குறித்த அதிகாரியை தவறென இனங்கண்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பாக பிரதேச செயலாளருக்கு அறிவித்து நடவடிக்கை எடுக்கக்கோரியபோதும் அவர் அதனைச் செய்யத்தவறியமையால் இவ்விடயத்தை மனித உரிமைகள் ஆணைக்குழு முல்லைத்தீவு மாவட்ட செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.

அதற்கமைய பணியிலிருந்த கிராம அலுவலகர் துணுக்காய் பிரதேச செயலகத்திற்கு இணைக்கப்பட்டு ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

Related Posts