Ad Widget

முல்லைத்தீவிலிருந்து சிங்கள மீனவர்கள் வெளியேற்றம்

முல்லைத்தீவு – நாயாறு களப்புப் பகுதியில் அத்துமீறி நுழைந்த 23 சிங்கள மீனவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

அவர்களால் அடாத்தாக அமைக்கப்பட்டிருந்த 8 வாடிகளில் 6 வாடிகள் அகற்றப்பட்டும் உள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய கடற்றொழில் அமைச்சின் பணிப்பாளரினால் கடந்த பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி நாயாறு களப்பு பகுதியில் 23 சிங்கள மீனவர்கள் தங்கியிருந்து கடற்றொழில் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த அனுமதியை எதிர்த்த நாயாறு தமிழ் மீனவர்கள் இந்த விடயம் தொடர்பாக மாகாணசபை உறுப்பினர் ஊடாக முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஊடாக மத்திய கடற்றொழில் அமைச்சுக்கும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இதற்கமைய, எடுக்கப்பட்ட நடவடிக்கையின் அடிப்படையில் நாயாறு தமிழ் மீனவர்கள் மத்திய கடற்றொழில் அமைச்சிற்கு நேரில் சென்று விடயம் தொடர்பாக பேச சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

பின்னர் கடந்த மாதம் 23 ஆம் திகதி குறித்த 23 சிங்கள மீனவர்களுக்கும் வழங்கப்பட்ட அனுமதியை இரத்து செய்து மத்திய கடற்றொழில் அமைச்சின் பணிப்பாளர் கடிதம் எழுதியுள்ளார்.

இதற்கிடையில் களப்பு பகுதியில் தங்கியிருந்து மீன்பிடிப்பதற்கு நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டதுடன், வாடி அமைப்பதற்கான அனுமதி பத்திரம் பெறாமையினால் வாடிகான் அகற்றுமாறு கரைதுறைப்பற்று பிரதேச செயலகம் கேட்டிருந்தது.

எனினும், சிங்கள மீனவர்கள் இந்த உத்தரவுகளை பொருட்படுத்தாத நிலையில், நாயாறு பகுதி தமிழ் மீனவர்களும், மாகாணசபை உறுப்பினர் து. ரவிகரனும் கடந்த 05 ஆம் திகதி நாயாறு களப்பு பகுதிக்கு நேரில் சென்று 8 ஆம், 9 ஆம் திகதிகளில் களப்பு பகுதியில் இருந்து வெளியேறுமாறு சிங்கள மீனவர்களுக்கு கூறியிருந்தனர்.

இந்த நிலையிலேயே குறித்த சிங்கள மீனவர்கள் வெளியேறியுள்ளதாக ரவிகரன் தெரிவித்துள்ளார்.

இதன்படி சிங்கள மீனவர்களால் அமைக்கப்பட்டிருந்த 8 வாடிகளில் 6 வாடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மீதி 2 வாடிகளிலும் மீனவர்கள் எவரும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாயாறு களப்பு பகுதியில் இருந்து வெளியேறிய சிங்கள மீனவர்கள் நாயாறு பெருங்கடல் பகுதியில் அடாத்தாக தங்கியிருக்கும் சுமார் 300 வரையான சிங்கள மீனவர்களுடன் இணைந்திருக்கிறார்கள் என ரவிகரன் மேலும் கூறியுள்ளார்.

Related Posts