யாழ்.நாக விகாரையின் முன்னாள் விகாராதிபதியின் பூதவுடல் தகனம் செய்யப்பட்ட முற்றவெளியில் விகாரை அல்லது நினைவிடம் அமைக்கும் எண்ணம் எமக்கு இல்லை என விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (திங்கட்கிழமை) யாழ்.நாக விகாரையில் இடம்பெற்றபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து ஸ்ரீ விமல தேரர் மேலும் தெரிவிக்கையில்,
“நாக விகாரையின் விகாராதிபதி மடிகே பஞ்ஞாசீக மகா நாயக்க தேரர் இறைபதம் அடைந்ததைத் தொடர்ந்து அவருடைய உடல் கடந்த 22 ஆம் திகதி முற்றவெளி மைதானத்தில் தகனம் செய்யப்பட்டிருந்தது. விகாராதிபதியின் பூதவுடலை தகனம் செய்வது தொடர்பாக யாழ்.மாநகர சபையிடம் கேட்டிருந்தோம்.
அவர்கள் அந்த இடம் தமக்கு சொந்தமானது அல்ல என கூறியதுடன் தொல்லியல் திணைக்களத்திற்கு சொந்தமான காணியே என கூறினார்கள். பின்னர் தொல்லியல் திணைக்களத்தை சந்தித்து அனுமதியைப் பெற்றிருந்தோம்.
மேலும் விகாராதிபதி ஒருவர் இறந்தால் அவருடைய உடல் பொது இடத்திலேயே தகனம் செய்யப்படும் என்பது முதலமைச்சருக்கு தெரியும். இதேபோல் தகனக் கிரியையில் இராணுவம் மற்றும் பொலிஸார் கலந்து கொண்டமை தொடர்பாகவும் ஊடகங்கள் வாயிலாக விமர்சனங்கள் எழுந்தன.
பொதுவாக விகாராதிபதி ஒருவர் இறந்தால் அவருடைய இறுதிச் சடங்கில் பௌத்தர்கள் பலர் கலந்து கொள்வார்கள். ஆனால், இங்கே பௌத்தர்கள் இல்லை. ஆகவே பௌத்தர்கள் என்ற வகையில் இராணுவத்தினரும், பொலிஸாரும் கலந்து கொண்டார்கள்.
இந்நிலையில் சிலர் தங்களுடைய அரசியல் நோக்கங்களுக்காக நாக விகாரையை இழுத்து இனவாதமாகவும், மதவாதமாகவும் பேசுகிறார்கள். ஆனால் நாகவிகாரை இனவாதம், மதவாதம் பரப்பும் இடமல்ல. அது இனங்களுக்கிடையிலும், மதங்களுக்கிடையிலும் நல்லிணக்கத்தையும், சமாதானத்தையும் உண்டாக்கும் பாலமாகும்.
அதனை விட பெருமளவில் சமூக சேவைகளை செய்யும் இடமாகவும் உள்ளது. எனவே முற்றவெளி மைதானத்தில் விகாராதிபதியின் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் நினைவுத்தூபி அல்லது விகாரை அமைக்கும் எண்ணம் எமக்கு இல்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.