Ad Widget

முறைப்பாடுகளை விசாரிக்கும் குழுவின் புதிய தலைவராக சர்வேஸ்வரன் நியமனம்

வடமாகாணத்தில் கடந்த காலங்களில் வழங்கப்பட்ட முறையற்ற நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் தொடர்பில் விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் புதிய தலைவராக ஆளுங்கட்சி உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தக் குழுவின் முன்னாள் தலைவரான எம்.அன்டுனி ஜெயநாதன், தனது தலைவர் பதவியை இராஜினாமா செய்ததையடுத்து, புதிய தலைவர் நேற்று செவ்வாய்க்கிழமை (10) அறிவிக்கப்பட்டுள்ளார்.

7 பேர் கொண்ட இந்தக் குழுவில் பாலச்சந்திரன் கஜதீபன், அரியகுட்டி பரஞ்சோதி, விந்தன் கனகரத்தினம், ஆயுப் அஸ்மின், தாமோதரம்பிள்ளை லிங்கநாதன், கந்தையா சர்வேஸ்வரன் ஆகியோர் இருந்தனர். இந்நிலையில், புதிய தலைவராக கந்தையா சர்வேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளதுடன், குழுவின் புதிய உறுப்பினராக அரியரட்ணம் பசுபதிப்பிள்ளை இணைக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, ‘வடமாகாணத்தில் வழங்கப்பட்ட முறையற்ற நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் தொடர்பில் விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் பதவியை பிரதி அவைத்தலைவர் எம்.அன்டனி ஜெயநாதன், கடந்த ஜனவரி மாதம் இராஜினாமா செய்துள்ளார். இதனால், அந்தக் குழுவின் செயற்பாடுகள் முடங்கியுள்ளன’ என வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார்.

‘குழுவின் தலைவர் பதவியை அன்டனி ஜெயநாதன், இராஜினாமா செய்தமையால், குழுவின் செயற்பாடுகள் கடந்த 5 மாதங்களாக ஸ்தம்பித்துள்ளன. குழுவிடம் முறைப்பாடு செய்தவர்கள், தங்கள் முறைப்பாடுக்களுக்கான பதில் என்ன என்று கொந்தளிக்கின்றனர். ஆகவே, பிரதி அவைத்தலைவர், குழுவின் தலைவர் பொறுப்பை ஏற்று, குழுவை மீண்டும் இயங்க வைக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், தலைவர் பதவியை இராஜினாமாக செய்தது தொடர்பில் அன்ரனி ஜெயநாதனிடம் கேட்டபோது, ‘இந்தக் குழுவின் தலைவராக நான் இருந்த போது, பல முறைப்பாடுகள் கிடைத்தன. முறைப்பாடுகள் தொடர்பில் அதிகாரிகளிடம் விசாரித்த போது, அப்போது பதவியில் இருந்த ஆளுநர் சொல்லி தாங்கள் அவற்றைச் செய்ததாக சொல்கின்றனர்.

பிரச்சினையொன்றை ஆராய்ந்தால் அந்தப் பிரச்சினை தொடர்பில் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். இதற்கு எப்படி தீர்வு பெற்றுக்கொடுப்பது என்று தெரியவில்லை. அதனால் தான் விலகினேன்’ என்றார்.

Related Posts