Ad Widget

முன்னாள் போராளிகள் மூவர் விடுதலை

பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் ஒரு வருட புனர்வாழ்வு பயிற்சிகளை நிறைவு செய்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் மூவர் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா நகரசபை மைதானத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போதே இவர்கள் சமுகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைந்து கொண்ட முன்னாள் போராளிகளின் 200 குடும்பங்களுக்கு நேற்று சுயதொழில்களுக்கான தையல் இயந்திரம் மற்றும் கோழிக்குஞ்சுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெற்றது.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், புனர் நிர்மானம் மற்றும் புனர்வாழ்வு காரியலாயம் மூலமாக வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு மாகாணம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த முன்னாள் போராளிகளுக்கு என ஒதுக்கப்பட்ட 50 இலட்சம் ரூபா நிதியிலிருந்து சுயதொழிலுக்காக உபகரணங்களும் காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டன.

மீள்குடியேற்ற அமைச்சர் டி. எம். சுவாமிநாதனின் ஆலோசனைகளுக்கு அமைய புனர்வாழ்வு திணைக்களத்தின் பணியகப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயகா, பிரிகேடியர் யூ. எஸ் பி. தர்சனலியனகே. வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி. றோஹக புஸ்பகுமார ஆகியோர் கலந்து கெண்டனர்.

இதன்போது கடந்த காலங்களில் தமிழீழ விடுதலை புலிகளுடன் இணைந்து செயற்பட்டமை தொடர்பில் சரணடைந்தும் கைதுசெய்யப்பட்டும், இருந்த நிலையில் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைக்கப்பட்டுவருகின்றனர்.

இந்நிலையில் ஒருவருட புனர்வாழ்வுப் பயிற்சி பெற்ற மட்டக்களப்பைச் சேர்ந்த செல்லப்பா சிவநாதன், அம்பாறையைச் சேர்ந்த தியாகராசா முரளிதரன், வாழைச்சேனையை சேர்ந்த கணபதிப்பிள்ளை அமரசிங்கம் ஆகிய முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைக்கப்பட்டனர்.

Related Posts