Ad Widget

முன்னாள் போராளிகள், மாவீரர்கள் தொடர்பில் தரவு சேகரிக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன

புனர்வாழ்வு அளிக்கப்பட முன்னாள் போராளிகள், தடுப்பிலுள்ள போராளிகளின் குடும்பங்கள், மாவீரர்களின் குடும்பங்கள் ஆகியோருக்கு உதவி வழங்கும் திட்டத்துக்காக தரவு சேகரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக வடமாகாண மீன்பிடி, வர்த்தக வாணிப மற்றும் கிராமி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், புதன்கிழமை (17) தெரிவித்தார்.

சேகரிக்கப்பட்ட தரவுகளை முன்னுரிமை அடிப்படையில் உதவிகள் வழங்கும் பொருட்டு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

‘வடமாகாண மீன்பிடி, வர்த்தக வாணிப மற்றும் கிராமி அமைச்சர் பா.டெனீஸ்வரன், அமெரிக்க அரசின் அழைப்பின் பேரில் கடல் வளங்கள் பாதுகாப்பு மற்றும் கரையோர முகாமைத்துவம் தொடர்பான செயலமர்வில் பங்கேற்க அமேரிக்கா சென்றுள்ளார்.

இம்மாத இறுதியில் அமைச்சர் நாடு திரும்பியவுடன் பயனாளிகளை நேரடியாக சந்தித்து அவர்கள் ஒவ்வொருவரினதும் தேவைக்கேற்பவும், திறமைக்கேற்பவும் பொருத்தமான உதவி திட்டங்களை உடனடியாக ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளார்’ செயலாளர் எஸ். சத்தியசீலன் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேற்படி குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டமானது வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினூடாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் சேகரிக்கும் நடவடிக்கை கடந்த பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts