Ad Widget

முன்னாள் போராளிகள் மாவீரர்களுக்கு துரோகம் இழைக்க மாட்டார்கள்: சிவாஜிலிங்கம்

முன்னாள் போராளிகள் இராணுவத்தில் இணைந்து கொள்வது மாவீரர்களுக்கும் அவர்களினது தியாகங்களுக்கும் செய்கின்ற துரோகமாகவே அமையும் என்றும் அவ்வாறான துரோகத்தை முன்னாள் போராளிகள் இழைக்க மாட்டார்கள் எனவும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் போராளிகளை இராணுவத்தில் இணைத்துக் கொள்ளவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே மாகாண சபை உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தற்போதைய நிலையில் இராணுவத்தில் முன்னாள் போராளிகள் இணைந்துகொள்வது, போர் குற்ற விசாரணைகள் தொடர்பான கோரிக்கைகளை மழுங்கடிக்கச் செய்துவிடும் என்றும் இவ்வாறான குற்றச்சாட்டுக்களில் இருந்து அரசாங்கத்தை பாதுகாக்கின்ற செயற்பாடாக அமைந்துவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டில் சரியான அரசியல் தீர்வு ஒன்று எட்டப்பட்ட பின்னர், இன விகிதாசரத்தின் அடிப்படையில் முப்படைகளிலும் தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படுகின்றபோது இணைந்து கொள்வதே சரியானதாக இருக்கும் எனவும் மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வு ஆணையாளரின் பணிப்புரைக்கமைய புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு ராணுவத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணத்திவுள்ள பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்வொன்றில் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts