Ad Widget

முன்னாள் போராளிகள் கைது: நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதி!

வடக்கு, கிழக்கில் முன்னாள் போராளிகள் கைது செய்யப்படுவது தொடர்பாக அறிந்து, நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்தார். அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் தலைவர்கள், பிரதம ஆசிரியர்களுடன் ஜனாதிபதி மாளிகையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பிலே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானத்திற்கு அமைவாக, விசாரணைகள் நடத்துவதற்குரிய கலந்துரையாடல்கள் இடம்பெறுகிறது. போர்க்குற்ற விசாரணையை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று, செவ்வாய்க்கிழமை இடம்பெற்றதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இனப் பிரச்சினைக்கு தீர்வாக வடக்கு கிழக்கு மாகாணம் இணைந்த சுயாட்சியுடன் கூடிய சமஸ்டி முறை அவசியமானது என வடமாகாண சபையில் நிறைவேற்றிய பிரேரணை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த ஜனாதிபதி, நாட்டை பிளவுபடுத்த மாட்டேன் என்று குறிப்பிட்டார். மாகாண சபைகளினால் நிறைவேற்றப்படும் பிரேரணைகள், முன்மொழிவுகள் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தமிழீழம் தான் ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு என்று தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் தேர்தல் பிரசாரங்களில் கூறி வருகின்றார்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, தமிழகத் தலைவர்கள் தேர்தலை மாத்திரம் இலக்காகக் கொண்டு செயற்படுவதாகவும் தமிழகத் தேர்தல் பிரசாரங்கள் தொடர்பாக தாக்கங்கள் எதுவும் இல்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து விளக்கமளித்த ஜனாதிபதி, சூழ்ச்சியான முறையில் மஹிந்த ராஜபக்ச அணியினர் அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு முயற்சிக்கின்றனர். ஆனால், அதற்கு நாடாளுமன்றம் இடமளிக்காது. சாதாரண பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைப்பதாக இருந்தால் அதற்கு 113 ஆசங்கள் தேவை. ஆனால், 113 ஆசனங்களை எடுக்கக்கூடிய தகுதி அந்த சூழ்ச்சிக்காரர்களுக்கு இல்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடம் 96 ஆசனங்கள் உள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியிடம் 106 ஆசனங்கள் உள்ளன. அவர்கள் ஆட்சி அமைப்பதானால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து ஆதரவைப்பெற வேண்டும். ஆனால் குறைந்தது 50 ஆசனங்களையாவது அவர்கள் பெற முடியாது. அப்படியானால், ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவைப் பெற வேண்டும். ஆனால் அதுவும் முடியாத காரியம். ஜேவிபி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகள் ஒருபோதும், மஹிந்த அணிக்கு ஆதரவு வழங்காது.இந்த நிலையில், சூழ்ச்சியான முறையில் அரசாங்கத்தை அமைக்கும் நடவடிக்கை சாத்தியப்படாது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் மீது கேள்விகள், குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. நல்லாட்சி அரசாங்கம் என்ன செய்தது என்ற கேள்விகள் நியாயமானவை என்று கூறிய ஜனாதிபதி, மோசடியான அரசாங்கம் ஒன்றை வீழ்த்தி, பதவியேற்ற புதிய அரசாங்கம் ஒன்று பாரிய சவால்களை எதிர்நோக்குவது இயல்பானது என்றும் குறிப்பிட்டார்.

சவால்களுக்கு மத்தியில் அரசாங்கத்தை கொண்டு நடத்துவதற்கான தகுதி, தனக்கும் பிரதமருக்கும் இருப்பதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இடம்பெற்ற ஜனநாயகத்திற்கு முரணான செயற்பாடுகள் தொடர்பாகவும் விளக்கமளித்தார்.

Related Posts