Ad Widget

முன்னாள் போராளிகள் என்பதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன

புனர்வாழ்வு பெற்றவர்கள் என்ற காரணத்தால் தனியார் மற்றும் அரச துறைகளில் தமக்கான வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு வருவதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் வகையில், அவர்களுக்கான நேர்முகத் தேர்வுகள் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றிருந்தன. அதனை தொடர்ந்து அமைச்சர் சுவாமிநாதனை சந்தித்து உரையாற்றிய போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், புனர்வாழ்வின் பின்னரே தாம் பட்டப்படிப்பை நிறைவுசெய்ததாக குறிப்பிட்ட முன்னாள் போராளிகள், தாம் முன்னாள் போராளிகள் என்ற ஒரு காரணத்தினால் தமக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டனர்.

அதேவேளை, பலர் திருமணம் முடித்து குடும்பத்தாருடன் இருக்கின்ற நிலையில், தமது சொந்த மாவட்டங்களில் வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுக்குமாறும் அவர்கள் அமைச்சரிடம் கோரியுள்ளனர்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளான 36 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் வகையில் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதன் அடிப்படையில், நேற்றைய தினம் அவர்களுக்கான நேர்முகத் தேர்வு உள்விவகார அமைச்சில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts