வடக்கில் தற்போது நடைபெறும் குற்றச்செயல்களுடன் முன்னாள் போராளிகளை தொடர்புபடுத்துவதானது, இலங்கையில் ஜனநாயக மரபுகளுக்கு இடமில்லையென சர்வதேசத்தில் எதிரொலிக்கச் செய்யுமென ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது.
இக்கட்சி விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் விடுதலைப் புலிகள் இன்னுமொரு ஆயுத அல்லது பயங்கரவாத நடவடிக்கையை மேற்கொள்வதற்கான சாத்தியமில்லை என்ற அடிப்படையில், முன்னாள் விடுதலைப் போராளிகளே வாள் வெட்டுகளுக்கும் குற்றவியல் சார் சம்பவங்களுக்கும் பொறுப்பு என்று கூறுவது அடிப்படையில் ஓர் குதர்க்கமாகுமென குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் சுமார் 12,000ற்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகள், புனர்வாழ்வளிக்கப்பட்டு ஜனாதிபதியால் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், ஜனாதிபதியால் விடுவிக்கப்பட்டவர்கள் மீது இவ்வாறு குற்றஞ்சுமத்துவதானது, ஜனாதிபதியின் ஆணைகள் அல்லது ஜனாதிபதியின் வரம்பிற்குட்பட்ட நியாயாதிக்கங்களை மீறுகிற ஒரு செயற்பாடாகவே அமையுமென ஜனநாயக போராளிகள் கட்சி மேலும் குறிப்பிட்டுள்ளது.