Ad Widget

முன்னாள் போராளிகளையும் கூட்டமைப்பு உள்வாங்கவேண்டும்!

முன்னாள் போராளிகளையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்வாங்க வேண்டுமென்பது தான் எமது கோரிக்கை. அவர்களில் பலர் பல வருட அரசியல் அனுபவம் உள்ளவர்கள் இருக்கிறார்கள்.முன்னாள் போராளிகளை, இலங்கை அரசாங்கம் தேசிய அரசியல் நீரோட்டத்தில் பங்குபற்றலாமென்று அனுமதி கொடுக்கும் பட்சத்தில் மேற்குலக நாடுகள் எம்மவர்கள் மேல் போட்டிருக்கும் தடைகள் நிரந்தரமாக எடுக்கப்படுமென்பதையும் நாம் முழுமையாக நம்புகின்றோம்.

இவ்வாறு தெரிவித்துள்ளனர் புலத்தில் வாழும் முன்னாள் போராளிகள்.

அவர்கள் எழுதியுள்ள கடிதத்தின் முழுவிவரம் வருமாறு-

எம் பாசத்துக்குரிய உறவுகளிற்கு, புலத்தில் வாழும் முன்னாள் போராளிகளின் பணிவான மடல்.

எம் மக்களின் விடிவிற்காக 30 வருடமாக எங்கள் தலைமை எம்மை நேர்மையான கட்டுக் கோப்போடு போராட்டத்தை கற்பித்தார்கள்.

முள்ளிவாய்க்காலிற்கு பிறகு, நாம் பல துன்பங்களை அனுபவித்து அதன் பிறகு எம்மவர்கள் இலங்கை சிறைகளிலும், ஈழத்திலும் மற்றும் புலத்திலும் வாழ்ந்து வருகின்றோம். ஆனால், எம்மவர்களின் பல கோரிக்கையை கடந்த 6 வருடங்களாக எந்த ஒரு தமிழ் கட்சிகளும் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கிய எம் தலைமை, அதன் பிறகு தேர்தல் காலத்தில் எந்த மாவட்டத்தில் யார் யாரை நிறுத்துவதுதென்று, இறிதி முடிவுகளை எடுப்பவர்களாக இருந்தார்களென்பதை கடந்த காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்த எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்.

முன்னாள் போராளிகளாகிய நாம், இன்றுவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பை முழுமையாக முழுமனதோடு மதிக்கின்றோம்.

ஆனால், முள்ளிவாய்க்காலிற்கு பிறகு எம்மவர்களை அரசியல் அநாதைகளாகவும் ஏதோ தீண்டத் தகாதவர்களாகவும் மட்டும் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பார்க்கின்றார்கள். தேர்தல் காலங்களில் மக்களின் வாக்குகளை சேகரிப்பதற்காக எமது அமைப்பின் அர்ப்பணிப்புக்களை சொல்லித் தான் வாக்குகளை முழுமையாக சேகரிக்கின்றார்களென்பது கடந்த கால நிகழ்வுகள் ஆதாரம்.

இலங்கை அரசியலில், முன்னாள் போராளிகள் பங்குபற்றலாமென்று அரசாங்கம் சொல்லும் பட்சத்தில் ஏன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்மவர்களை சேர்ப்பதற்கு தயங்குகின்றது?

உங்களின் கதிரைகளை நீங்கள் நிரந்தரமாக இறுகப் பிடித்து வைப்பதற்காகவா? அப்படியென்றால், எம்மவர்கள் உங்களிற்கு நிரந்தரமான கருவேப்பிலையா?

பல காலமாக சிறையில் வாழும் எம்மவர்களின் விடுதலைக்காக நீங்கள் இன்றுவரை ஏதேனும் அழுத்தமான முடிவுகளை எடுத்தீர்களா?

குறிஞ்சி பூக்கள் பூப்பது மாதிரி ஊடகங்களினூடாக அது செய்தோம் இது செய்தோமென்று சொற்பேச்சோடு மட்டும் இருந்தால், சிறைகளில் வாழும் எம்மவர்கள் எப்படித் தான் வெளியில் வர முடியும்.

கடந்த சில நாட்களிற்கு முன், சில இணையதளங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்து சிறையில் வாழும் முன்னாள் போராளிகளின் கடிதமென்று பிரசுரித்தார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால் சிறுபிள்ளைத்தனமாக உண்மைக்கு புறம்பான பொய்யான செய்திகளை வெளியிட்டு மக்களை திசை திருப்பப் பார்க்கின்றார்கள். சிறையில் வாழும் எம்மவர்களிற்கு இன்றுவரை புலத்தில் வாழும் முன்னாள் போராளிகள் தான் உதவிகளை செய்து வருகின்றார்கள்.

முன்னாள் போராளிகளை, இலங்கை அரசாங்கம் தேசிய அரசியல் நீரோட்டத்தில் பங்குபற்றலாமென்று அனுமதி கொடுக்கும் பட்சத்தில் மேற்குலக நாடுகள் எம்மவர்கள் மேல் போட்டிருக்கும் தடைகள் நிரந்தரமாக எடுக்கப்படுமென்பதையும் நாம் முழுமையாக நம்புகின்றோம்.

எம்மவர்களில் பல வருட அரசியல் அனுபவசாலிகள் இருக்கின்றார்கள். அவர்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்வாங்க வேண்டுமென்பது தான் எமது கோரிக்கை.

குறைந்த பட்சம் மாவட்டத்திற்கு 2 பேரையாவது தெரிவு செய்ய வேண்டும். முன்னாள் போராளிகள் பதவிகளிற்காக வரவில்லை. உணர்வு பூர்வமாக பாதிக்கப்பட்டவர்களிற்குத் தான் மக்களின் உண்மையான தேவைகள் தெரியும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் முன்னாள் போராளிகளிற்கு எச்சரிக்கையென்ற தலைப்பிலும் செய்திகளை வெளியிட்டார். ஏதோ நாம் இரத்தக் கறைபடிந்தவர்களென்றும் தீண்டத் தகாதவர்களென்றும் பல சந்தர்பங்களில் பிரச்சாரம் செய்கின்றார்கள்.

அவர்களிற்கு நாம் சொல்லும் வார்த்தை தேர்தல் காலத்தில் மேடை போட்டு எம் உறவுகளிடம் வாக்கு சேகரிக்கும் போது எம் மாவீரர்களின் அர்ப்பணிப்புக்களை சொல்லி வாக்கு சேகரிப்பதை நிறுத்துமாறு தாழ்மையோடு வேண்டிக் கொள்கின்றோம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு எல்லா மாவட்டங்களின் இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிடும் முன், முன்னாள் போராளிகளின் கோரிக்கைகளிற்கு செவிமடுக்காது உதாசீனப்படுத்தும் பட்சத்தில் பாரிய அரசியல் மாற்றம் நிகழுமென்பதை இந்த சந்தர்ப்பத்தில் சுட்டிக் காட்டுகின்றோம்.

அதன் பிறகு, முன்னாள் போராளிகள் தனிக்கட்சியாக உருவாகி, எம் உறவுகளின் முழு ஆதரவோடு வரும் தேர்தலில் போட்டி போடுவார்களென்பதையும் ஆணித்தரமாக உறுதியோடு சொல்கின்றோம். அப்படியொரு நிலைமை வந்தால் அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பே முக்கிய காரணம்.

இந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற முன்னாள் போராளிகளின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விடயங்கள் எம் உறவுகளிற்காக.

தமிழர்களின் உரிமைகளை ஈட்டுவதற்கான ஜனநாயக நடவடிக்கைகளில் அர்த்தமுள்ள வகையில் நேர்மையுடனும் நெஞ்சுரத்துடனும் ஈடுபட்டு, ஒரு முறையான அரசியல் தலைமைத்துவத்தை தமிழர்கள் மத்தியில் நிலைநிறுத்துவது.

கடந்த கால இழப்புகளினால் பாதிக்கப்பட்ட நமது மக்களின் வாழ்வாதார வளங்களைக் கட்டி எழுப்பி, புனர்வாழ்வு, புனரமைப்புப் பணிகளை உத்வேகத்துடன் முன்னெடுத்து, அரசியல் கைதிகளின் விரைந்த விடுதலைக்கு அழுத்தம் தந்து அர்த்தமுள்ள வகையில் பங்களிப்பது.

நீதி, நியாயமான ஜனநாயக நடவடிக்கைகளில் அர்த்த சுத்தியுடன் பங்களிப்பதன் மூலம், தமிழ்ப்பேசும் மக்களின் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு தமிழர்களுக்கும் தென்னிலங்கையின் நியாயமான அரசியல் தலைமைகளுக்கும் இடையில் பலமான இணைப்புப் பாலமாக விளங்கத்தக்க வகையில் வினைத்திறனுடனும் செயற்படுவது.

இத்தீர்மானங்களுடன், பொதுத் தேர்தலை ஒட்டி மேற்கொண்டு எடுக்கவேண்டிய தந்திரோபாய உத்திகள் குறித்தும் ஆராய்ந்து திட்டங்கள் வகுக்கப்பட்டன.

எம் சக முன்னாள் போராளிகள் எடுக்கும் அரசியல் பணிக்கு இலங்கை சிறைகளில் வாழும் முன்னாள் போராளிகளும் மற்றும் புலத்தில் இருக்கும் முன்னாள் போராளிகளும் முழு மனதோடு வாழ்த்தி அவர்களின் வெற்றிக்காக மக்களோடு சேர்ந்து கடுமையாக உழைப்போம்.

நன்றி புலத்தில் வாழும் முன்னாள் போராளிகள்.

குறிப்பு : முன்னாள் போராளிகளின் அரசியல் வேலைத் திட்டத்திற்கு, புலத்தில் வாழும் எம் உறவுகளான ஊடக நண்பர்களின் உதவிகள் எமக்கு தேவைப்படுகின்றது. கடந்த காலத்தில் எமக்கு பக்கத் துணையாக நின்ற மாதிரி எதிர்காலத்திலும் நீங்கள் எல்லோரும் எங்களிற்கு பக்கத் துணையாக நிற்பீர்கள் என்பதில் எமக்கு முழு நம்பிக்கையிருக்கின்றது.

Related Posts