Ad Widget

முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும்

கடந்த 30 வருடகாலமாக பேராளிகளாக இருந்து புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர்களுக்கு சலுகைகள் வழங்கி அவர்களின் தரத்துக்கு ஏற்ப பதவிகளை வழங்க வேண்டும் என்ற பிரேரணை வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (24) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (24) அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றபோது, சுகிர்தன் இந்த பிரேரணையை முன்வைத்தார்.

பிரேரணையை முன்வைத்து சுகிர்தன் உரையாற்றுகையில்,

எமது மக்களின் விடிவுக்காக போராடியவர்கள் இன்று அனாதரவாக்கப்பட்டு இருக்கின்றார்கள். மாவீரர் நாள் நினைவு கூறுதல், துயிலும் இல்லங்களை நிறுவுதல் போன்றவற்றை பற்றி பேசுகின்றோம். ஆனால் எமது மண்ணிற்காக போராடிய போராளிகளை பற்றி சிந்திக்காமல் இருக்கின்றோம்.

முன்னாள் போராளிகள் தவறாக வழிநடத்தப்படுகின்றார்கள். புனர்வாழ்வு பெற்ற போராளிகளுக்கு அரச வேலைவாய்ப்புக்கள் வழங்கவேண்டும். வாழ்வாதாரத்தை அதிகரிப்பதோடு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவேண்டும் என்றார்.

முல்லைத்தீவில் பண்டாரவன்னியன் சிலை நிறுவப்படவேண்டும்

இதேவேளை, வன்னி நிலப்பரப்பை ஆட்சி செய்த தமிழ் மன்னான பண்டாரவன்னியனின் வாளேந்திய உருவச்சிலை முல்லைத்தீவு நகரில் நிறுவப்படவேண்டும் என்ற துரைராசா ரவிகரனுடைய பிரேரணையும் சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

பிரேரணை முன்வைத்து ரவிகரன் உரையாற்றுகையில்,

யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய இடங்களில் பண்டாரவன்னியனின் சிலை நிறுவப்பட்டுள்ளது. இதுவரை வன்னி நிலப்பரப்பில் சிலை நிறுவப்படவில்லை. அது முறையாக நிறுவப்படவேண்டும் என்றார்.
முறைப்படி அமைச்சர்களிடம் விண்ணப்பித்து சிலையை நிறுவுவதற்கு ஏற்பாடு செய்ய முடியும் என அவைத்தலைவர் கூறினார்.

Related Posts