முன்னாள் போராளிகளின் பிரச்சினை குறித்து ஜனாதிபதியுடன் நேரடி பேச்சுவார்த்தை

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக வடமாகாண ஆளுநர் ரெஜினால்ட் குரே தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற பொங்கல் விழா நிகழ்வின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ‘யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் பல இளைஞர்கள் வாழ்வாதார பிரச்சினையை எதிர்க்கொண்டு இருக்கின்றனர். யுத்த காலத்தில் விடுதலை புலிகள் அமைப்பில் இணைந்து செயற்பட்டு வந்த இளைஞர்கள் தற்போது எவ்வித தொழில்வாய்ப்புகளும் இன்றி காணப்படுகின்றனர்.

முன்னாள் போராளிகளின் இப்பிரச்சினையை தீர்க்க ஒரு திட்டம் தீட்டப்பட வேண்டும். எனவே இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் முதலமைச்சருடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன்.

அதன்படி அவர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் முன்னாள் போராளிகள் ஆளுநரிடம் மகஜர் கையளித்தனர். அத்துடன், வேலைவாய்ப்பு கோரி ஆளுநருடன் முன்னாள் போராளிகள் கலந்துரையாடலிலும் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts