Ad Widget

முன்னாள் புலிகள் அச்சத்தில்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் முக்கிய உறுப்பினர்கள் தொடர்ச்சியாகக் கைதுசெய்யப்பட்டு வருவதனால், புனர்வாழ்வு பெற்று சமூகமயப்படுத்தப்பட்டுள்ள புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் மத்தியில் அச்ச நிலைமை ஏற்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட முன்னாள் தளபதியான எதிர்மன்னசிங்கம் அரிச்சந்திரன் என்றழைக்கப்படும் ராம் என்பவர், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் (ரி.ஐ.டீ) கடந்த 24ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டார்.

அவர் கைதுசெய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பின்னர், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சார்ள்ஸ் அன்டனி படையணியின் கட்டளையிடும் அதிகாரியான நகுலன் என்றழைக்கப்படும் சிறிசிவமூர்த்தி கணபதிப்பிள்ளை, கடந்த 26ஆம் திகதியன்று கைதுசெய்யப்பட்டார்.

அதேதினத்தன்று, தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் புலனாய்வுப் பொறுப்பாளரான கலையரசன் என்றழைக்கப்படும் அறிவழகன், பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

புலிகள் அமைப்பின் முக்கிய தளபதிகளானச் செயற்பட்ட முன்னாள் உறுப்பினர்கள் தொடர்ச்சியாகக் கைதுசெய்யப்பட்டுவருவதையடுத்தே புனர்வாழ்வு பெற்று சமூகமயப்படுத்தப்பட்டுள்ள புலிகள் அமைப்பின் சகல மட்டத்திலான முன்னாள் உறுப்பினர்கள் மத்தியில் அச்சநிலைமை ஏற்பட்டுள்ளது என்று, எமது பிரதேச செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இது இவ்வாறிருக்க, 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் திகதிக்கு பின்னர், பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால், இதுவரையிலும் ஆறுபேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணையக்குழுவில் யாழ்ப்பாணக் கிளையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று, அவ்வலுவலகத்தின் இணைப்பாளர் ரி.கனகராஜ், நேற்றுப் புதன்கிழமை (27) தெரிவித்தார்.

சாவகச்சேரி பகுதியில் இருவரும், கிளிநொச்சி, கல்வியங்காடு, நீர்வேலி, மற்றும் மானிப்பாய் பகுதிகளில் தலா ஒவ்வொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில், விடுதலைப் புலிகள் அமைப்பின் சார்ள்ஸ் அன்டனி படைப்பிரிவின் சிறப்புத் தளபதியாக இருந்த நகுலன் என்று அழைக்கப்படும் கணபதிப்பிள்ளை சிறிசிவமூர்த்தியும் உள்ளடங்குகின்றார்.

சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து மார்ச் மாதம் 30ஆம் திகதியன்று தற்கொலை அங்கி மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்டதையடுத்தே, இவ்வாறான கைதுகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts