முன்னாள் கடற்படைத் தளபதி கைதாகி பிணையில் விடுதலை

முன்னாள் கடற்படைத் தளபதியான அட்மிரல் ஒப் த ஃப்ளீட் வசந்த கரண்ணாகொட, 2006 ஆம் ஆண்டு யோஷித ராஜபக்ஷவை இலங்கை கடற்படையில் இணைத்தமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) இன்று (வெள்ளிக்கிழமை) கைது செய்யப்பட்டார்.

கைதுக்குப் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில், அந்தப் பதவிக்குத் தேவையான தகுதிகள் இல்லாத நிலையிலும் யோஷித ராஜபக்ஷவை கடற்படை கேடட் நிர்வாக அதிகாரியாக (Cadet Executive Officer) நியமித்ததாக வசந்த கரண்ணாகொட மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், வழமையான ஆட்சேர்ப்பு நடைமுறைகளுக்கு வெளியே, அரசின் செலவில் ஐக்கிய இராச்சியத்தின் ரோயல் நேவல் அகாடமியில் (Royal Naval Academy) பயிற்சி பெறுவதற்கும் யோஷித ராஜபக்ஷவுக்கு வசதி செய்து வழங்கப்பட்டதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கைகள் ஊழல் குற்றமாகக் கருதப்படுகின்றன என CIABOC குறிப்பிட்டுள்ளது.

இன்று காலை 10.05 மணியளவில் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் வசந்த கரண்ணாகொட கைது செய்யப்பட்டதுடன், அவர் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் அதன்பின் அவர் பிணையில் விடுதலையானார்.

Related Posts