Ad Widget

முந்தைய அரசாங்கம் போர்க்களத்தை வென்றாலும் தமிழர்களின் மனதை வெல்லவில்லை!

இலங்கையின் முந்தைய அரசாங்கத்தினால் போர்க் களத்தை வெல்ல முடிந்த போதிலும், தமிழ் மக்களின் மனதை வெல்ல முடியாமல் போனதாக வட மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

koorey-alunar

தமிழர்களின் மனதை வென்று, அவர்களுக்கான உரிமைகளை வழங்குவதற்கான தற்போதைய அரசாங்கத்தின் முயற்சிக்கு தான் உறுதுணையாக இருக்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

முன்னாள் அமைச்சரான ரெஜினோல்ட் குரே, வட மாகாண ஆளுநராக ​நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

வடக்கில் கடந்த காலங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டாலும், அவை பெரும்பாலும் தென்பகுதியிலுள்ள ஒப்பந்தக்காரர்கள் மற்றும் வர்த்தகர்களைக் கொண்டே முன்னெடுக்கப்பட்டு வந்தது என்று தெரிவித்த அவர், இவ்வாறான நடவடிக்கைகளை வட பகுதியைச் சேர்ந்த மக்களுடன் சேர்ந்து செய்திருக்க வேண்டும் எனவும் கூறினார்.

பொதுமக்களின் காணிகளை 6 மாதங்களுக்குள் கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறிய வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, அதனை துரிததப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

தமிழர் பிரதேசங்களில் சிங்களவர்களுக்கு உயர் பதவி வழங்குவது பற்றி எழுப்பப்படும் கேள்விகள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியபோது.

´அதில் தவறு இல்லை´ என்று பதிலளித்த ரெஜினோல்ட் குரே, சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் மேல் மாகாணத்தில் தமிழர் ஆளுநாராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறினார்.

தென் பகுதியில் முக்கிய பதவிகள் பலவற்றை தமிழர்கள் வகித்து வருகின்றனர் என்று சுட்டிக்காட்ட விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts