முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் இராணுவ முகாமுக்குள் இளைஞர்கள் சட்டவிரோதமாக பிரவேசித்தமை பிரிவினைவாத தரப்பினரின் திட்டமிட்டசெயலாகவே தெரிவதாக பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” முல்லைத்தீவு முத்தையன்கட்டு ராணுவ முகாமுக்குள் சென்ற இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தின் மூலம் சில பிரிவினைவாத தரப்பினர் அரசியல் லாபம் ஈட்டுவதற்கு முயற்சிக்கின்றனர்.
இதனூடாக அவர்களின் நீண்டகால கனவை நனவாக்க எதிர்ப்பார்க்கின்றனர். வடக்கில் உள்ள இராணுவ முகாம்கள் அங்கிருந்து முற்றாக அகற்றப்பட வேண்டும் என்பதே அவர்களின் எதிர்ப்பார்ப்பு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தாக்குதல்கள் மூலம் வடக்கில் இருந்து ராணுவத்தினரை வெளியேற்றுவதற்கு முயற்சித்திருந்தார்.
30 வருடமாக உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற போதிலும் புலிகளின் தாக்குதலில் அங்கிருந்து 10 ராணுவ முகாம்களையேனும் அகற்றமுடியவில்லை.எனவே தற்போதும் அவ்வாறான நிலையே மீண்டும் உருவாகியுள்ளது. வேலுப்பிள்னை பிரபாகரன் மேற்கொண்ட நடவடிக்கையின் தொடர்ச்சியாகவே இது அமைந்துள்ளது.
வடக்கில் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பது பிரச்சினையாகும் எனவே அங்கிருந்து ராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் என சுமந்திரன் கூறுகிறார்.
முல்லைத்தீவு முத்தையன்கட்டு ராணுவ முகாமுக்குள் இடம்பெற்ற சம்பவமானது திட்டமிட்டசெயலாகவே தெரிகிறது. பிரச்சினையொன்றை தோற்றுவிப்பதற்காகவே பிரிவினைவாத தரப்பினர் இளைஞர்களை பலிக்கடாவாக்கியுள்ளனர். ஏனெனில் சுயநினவில் இருக்கும் எவரும் இராணுவ முகாமுக்குள் களவாட செல்லமாட்டார்கள்” இவ்வாறு பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.