Ad Widget

முதியோர்களுக்கு முன்னுரிமை கொடுங்கள் – மனித உரிமை ஆணைக்குழுவின் இணைப்பாளர்

திணைக்களங்கள், நிறுவனங்கள் என எவையாக இருந்தாலும் முதியவர்கள் தங்களுடைய தேவைகளை நிறைவேற்ற வரும்போது வயது அடிப்படையில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். மாவட்ட இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்தார்.

human-kanakaraj

முதியவர்களுக்கு உரிய சட்டங்கள் மற்றும் அவற்றை அமுல்ப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் என்பன தொடர்பில் கருத்தாய்வு ஒன்று இன்று கைதடி முதியோர் இல்லத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முதியவர்களுக்கு என்று சட்டங்கள் அரசியல் அமைப்பில் அமுல்ப்படுத்தப்படவில்லை. எனினும் அடிப்படை உரிமைச்சட்டம் மற்றும் குடும்ப வன்முறை என்பன தொடர்பில் மட்டுமே பொதுவான சட்டங்கள் காணப்படுகின்றன.

எனினும் இன்று முதியவர்களது பிரச்சினை அதிகமாக காணப்படுகின்றது. இதற்கு பிள்ளைகளது செயற்பாடுகளே காரணமாக அமைகின்றன. அத்துடன் சமூகத்தில் அவர்களுக்கு கொடுக்கின்ற மதிப்பும் குறைவாகவே இருக்கின்றது.

வீதிகளில் வயோபர் ஒருவர் நின்றால் அவரை பேருந்தில் ஏற்றினால் இடம் கொடுக்கவேண்டும் என்றும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டும் என்றும் நினைத்து அவர்களை ஏற்றாது செல்வதும் குறித்த இடத்தில் யாரையாவது இறக்க வேண்டுமாயின் முதியவர் நிற்கும் இடத்திற்கு அப்பால் கொண்டு சென்று பேருந்தை நிறுத்துவதும் தற்போது நடைபெற்று வருகின்றது.

இந்த நிலை எதிர்காலத்தில் நிறுத்தப்பட வேண்டும். இதற்கு உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் முதியவர்கள் தங்களுடைய தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு திணைக்களங்கள், பொலிஸ் நிலையங்கள், வைத்தியசாலை ,அஞ்சல் அலுவலகம் மற்றும் வங்கிகளுக்கு வரும் போது முதியவர்கள் என்று கூட பாராது நீண்ட நேரமாக காத்து இருந்தே தேவைகளை நிறைவேற்றிச் செல்ல வேண்டியுள்ளது.

இதனால் அவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். எனவே முதியவர்கள் தங்களுடைய தேவைகளை நிறைவேற்ற வரும் போது அங்குள்ள அதிகாரிகள் வயது அடிப்படையில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts