Ad Widget

முதலமைச்சர் நிதியம் உருவாக்கப்படக்கூடிய சாத்தியங்கள் உண்டு

முன்னாள் வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியால் நிறுத்தி வைக்கப்பட்ட முதலமைச்சர் நிதி நியதிச்சட்டம் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தக்கூடிய சாத்தியங்கள் எதிர்காலத்தில் இருப்பதாக வட மாகாண சுகாதார அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார்.

saththeyalingam

கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நடைபெற்ற வட மாகாண சமூக சேவை திணைக்கள உத்தியோகஸ்தர்களுடனான கலந்துரையாடலிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

சமூக சேவைகள் புனர்வாழ்வு, பெண்கள் விவகாரம் ஆகிய இரண்டு அமைச்சுப் பொறுப்புக்கள் கடந்த 2014ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 10ஆம் திகதி முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் அனுமதியுடன் வட மாகாண சுகாதார அமைச்சின் கீழ் மேலதிகமாக கொண்டு வரப்பட்டது.

இதனையடுத்து, சமூக சேவை அமைச்சின் பணிகளை ஆராயும் கலந்துரையாடலாக இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் சமூக சேவைகள் திணைக்களத்தால் 2014ஆம் ஆண்டு வட மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட முன்னேற்றகரமான நடவடிக்கைகள் குறித்து, சகல மாவட்டங்களின் சமூக சேவை உத்தியோகஸ்தர்கள் விளக்கமளித்தனர்.

போரால் பாதிக்கப்பட்ட வட மாகாணத்துக்கு எவ்வகையான விடயங்களில் அக்கறை செலுத்த வேண்டும், புனர்வாழ்வு நடவடிக்கைள் மேற்கொள்ளுதல், அதற்கான நிதி மூலங்களை கண்டறிதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்தம் இதில் கலந்துரையாடப்பட்டன.

வடமாகாணத்தில் அதிகளவான மாற்றுவலுவுள்ளோரும், கைவிடப்பட்டவர்களும் இருப்பதால் அவர்களுக்கான பல செயற்றிட்டங்கள் மேற்கொள்ளவேண்டும் எனவும், அதற்கான நிதி அதிகமான தேவைப்படும் எனவும் சமூக சேவை உத்தியோகஸ்தர்கள் குறிப்பிட்டனர்.

இதற்குப் பதிலளிக்கையிலேயே சத்தியலிங்கம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

முதலமைச்சர் நிதியம் நடைமுறைப்படுத்தப்பட்டால், புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் உள்ள பலர் நிதியுதவி செய்வார்கள். அந்த நிதியுதவியின் மூலம் எமது மக்களுக்கான புனர்வாழ்வு அபிவிருத்தி நடவடிக்கைகளை செய்ய முடியும்.

வட மாகாணத்தில் சிறந்த சமூக சேவை பணிகளை முன்னெடுக்கும் பொருட்டு, வட மாகாண சமூக சேவை உத்தியோகஸ்தர்களுடன் 03 மாதங்களுக்கு ஒருமுறை கலந்துரையாடல் நடத்தப்பட்டு, செயற்றிட்டங்கள் தொடர்பில் ஆராயப்படும் என தெரிவித்தார்.

Related Posts