Ad Widget

முதலமைச்சர் சி.வி.க்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்: மாவை

வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர்ந்து தமிழரசுக் கட்சியை புறக்கணித்து வருகின்ற நிலையில், முதல்வருக்கு எதிரான மாகாண சபை உறுப்பினர்களின் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டிய நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக மாகாண அமைச்சர்களினால் நம்பிக்கையில்லா பிரேரணை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், வடக்கு மாகாண சபையில் நீடித்துவரும் குழப்பநிலை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் தெரிவித்த அவர், ”வடக்கு மாகாண அமைச்சர்கள் நால்வருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள ஊழல் மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் மாகாண சபையில் உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின்னரே தீர்மானத்தை வெளியிடுவேன் எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், நேற்று உறுப்பினர்களின் கருத்துக்களை பொருட்படுத்தாது, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்றும் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான அமைச்சர்கள் விசாரணை முடிவடையும்வரை கட்டாய விடுமுறையில் செல்ல வேண்டும் எனவும் தனது தீர்மானத்தை வெளியிட்டுள்ளார்.

எம்முடன் கலந்துரையாடி தீர்மானத்திற்கு வருவதாக கூறிய முதலமைச்சர், தமிழரசுக் கட்சியை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். இந்நிலையில், முதல்வருக்கு எதிரான மாகாண அமைச்சர்களின் தீர்மானத்தை நாம் ஆதரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்” என்றார்.

Related Posts