Ad Widget

முதலமைச்சர் சபையை முற்றாக புறக்கணித்துவிட்டார் – ஜி. ரி. லிங்கநாதன்

முதலமைச்சர் சபையை முற்றாக புறக்கணித்துவிட்டார் என்பதை அவரது நடவடிக்கைகள் உணர்த்துகின்றன என வட மாகாண சபையின் வவுனியா மாவட்ட உறுப்பினர் ஜி. ரி. லிங்கநாதன் குற்றம் சாட்டினார்.

வவுனியா, கோவில்குளத்தில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்.

கடந்த மாகாணசபை அமர்வின்போது விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் மூங்கில் செய்கை, மல்லிகைச்செய்கை என்பவற்றை தனியார் செய்ய முற்பட்டபோது அதனை தடுத்திருந்தார் என்பதனை சுட்டிக்காட்டியிருந்தேன்.

இது முழுக்க முழுக்க விவசாயிகளை கொண்ட மாவட்டம். குளங்களை கொண்ட மாவட்டம். எனினும் விவசாய அமைச்சு கடந்த இரண்ட வருடங்களாக ஒன்றுமே செய்யாது இருக்கின்றது.

இந் நிலையில் தனியார் செய்வதையாவது ஊக்கப்படுத்தி ஒழுங்குகளை செய்து கொடுக்க முற்பட்ட வேளைகளில் அமைச்சர் தடுத்துள்ளார். இந்த விடயங்களையே நானும் மாகாண சபை உறுப்பினர் எம். தியாகராசாவும் சபையில் தெரியப்படுத்தினோம்.

இந்த குற்றச்சாட்டை நான் முதலில் முன் வைத்தேன். அதன் பின்னர் உறுப்பினர்கள் குறித்த அமைச்சர் மீது இன்னும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்தனர். ம.தியாகராசா, .சுகிர்தன், ஆர்னோல்ட், அஸ்மின், சிவாஜிலிங்கம், சர்வேஸ்வரன், சஜந்தன் ஆகிய உறுப்பினர்களும் விவசாய அமைச்சரின் குறைபாடுகளை சுட்டிக்காட்டினார்கள்.

இவ்வாறு முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் குறிப்பிட்ட அமைச்சர் நல்லாட்சிக்கு விரோதமாக செயற்படுகின்றார் என்றும், கூட்டுப்பொறுப்போடு செயற்படாமல் இருக்கின்றார் என்றும் ஊழல்மோசடிகளோடு தொடர்புபட்டிருக்கின்றார் என்றும் மக்களையும் மக்கள் பிரதிநிதிகளையும் ஏமாற்றுகின்றார் என்றுமே அமைந்திருந்தன. இவற்றுக்கு முதலமைச்சர் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கேட்கப்பட்டது.

இது விடயமான பிரேரணை சபையில் முன்வைக்கப்பட்டபோது, அமைச்சர் ஐங்கரநேசன் மாத்திரமே தன் மீதான குற்றச்சாட்டுகளில எவ்வித உண்மையும் இல்லை என்று வாதிட்டதோடு அதனை பேரவைத்தலைவரின் திட்டமிட்ட சதி என்றும் கூக்குரலிட்டார். ஏனையஅமைச்சர்களோ அல்லது உறுப்பினர்களோ இவருக்கு ஆதரவாக எதுவித கருத்துக்களையும் முன்வைக்கவில்லை. இதனால், பிரேரணை ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இவ்வாறு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையானது முதமைச்சரை நோக்கியதாகவும் அவரிடத்தில் நீதி விசாரணையொன்றைக் கோருவதாகவுமே அமைந்திருந்தது. இவ்வாறான நிலையில் 10-02-2016 அன்று முழங்காவில் பஸ்தரிப்பிடதிறப்பு விழாவில் முதலமைச்சர் முன்வைத்த கருத்துக்களின் மூலம் பின்வரும் விடயங்கள் தெளிவாகின்றன.

வடக்கு மாகாண சபையில் தன் மீது பொறுப்பளிக்கப்பட்ட பிரேரணை விடயத்தில் தான் நீதியாக செயற்படமாட்டேன். அமைச்சர் ஐங்கரநேசனுக்கு சார்பாகவே செயற்படுவேன் என்பதையும்
உறுப்பினர்களின் ஏகமனதான தீர்மானம் வேடிக்கையானது. அது தூசுக்குக் கூட பெறுமதியில்லாதது என்றுதான் கருதுவதாகவும் மக்களின் பிரச்சினைகள், முறைப்பாடுகள், குற்றச்சாடுகள் எதனையும் தான் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்போவதில்லை என்பதையும குறிப்பாக வவுனியா மக்களின் விவசாயம் சார்ந்த பிரச்சினைகளை தான் ஏரெடுத்தும் பார்க்க வில்லை என்பதாகவுமே அமைந்திருக்கின்றது.

இந் நிலையில் வட மாகாண சபையின் ஆளும்தரப்பு உறுப்பினர்கள் மாத்திரமன்றி, எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் கூட முதலமைச்சரின் மீது வைத்திருந்த பேரன்பையும் பெருமதிப்பையும் அவர் உதாசீனம் செய்துவிட்டார். அவர் சபையை முற்றாக புறக்கணித்துவிட்டார் என்பதை அவரது நடவடிக்கைகள் உணர்த்துகின்றன என்றும் தெரிவிக்கின்றனர்.

அடுத்து மாகாண சபையின் ஆளும் தரப்பின் குழுக்களின் தலைவர் என்னும் அந்தஸ்த்தையும் அவர் இழந்துவிட்டார்.

விரைவில் உறுப்பினர்கள் ஒன்றுகூடி இது தொடர்பிலான இறுதித் தீர்மானம் ஒன்றினை முன்னெடுப்போம்.
இது விடயமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களுக்கும் தெரியப்படுத்தப்படும் என்றார்.

Related Posts