Ad Widget

முதலமைச்சருக்கு உள்ள அதிகாரங்களை முதலமைச்சர் சரியான முறையில் பயன்படுத்தவில்லை: டெனீஸ்வரன்

வட மாகாண முதலமைச்சர் பக்கச்சார்பாகவும், சட்டத்திற்கு எதிராகவும் செயற்பட்டு வருவதாக வடமாகாண முன்னாள் மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.

மன்னாரில் அவரது அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

வடமாகாண முதலமைச்சர் மற்றும் முன்னைய மாகாண சுகாதார அமைச்சர், வடமாகாண ஆளுனர் ஆகியோருக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் கடந்த 30 ஆம் திகதி வழக்குத் தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

13ஆவது திருத்தச்சட்டத்திலோ அல்லது மாகாண சபைகள் சட்டத்திலோ எந்த ஒரு இடத்திலும் முதலமைச்சர் நியமித்த எந்த ஒரு அமைச்சரையும் நீக்குவதற்கு அதிகாரம் வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் முதலமைச்சருக்கு உள்ள அதிகாரங்களை அவர் சரியான முறையில் பயன்படுத்தவில்லை என கூறிய அவர், கடந்த 20 ஆம் திகதி முதலமைச்சர் தன்னை அமைச்சு பதவியில் இருந்து நீக்கியமையே தான் நீதிமன்றத்தை நாடியமைக்கான காரணம் எனவும் தெரிவித்தார்.

ஆகவே இரண்டு வாரத்திற்குள் வடமாகாண முதலமைச்சர் மற்றும் பிரதி வாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள அனைவரும் இதற்கு பதில் கூற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

முதலமைச்சருக்கும், தனக்கும் எந்த விதத்திலும் தனிப்பட்ட பிரச்சினைகள் இல்லை என தெரிவித்த அவர், மாகாண சபையினை ஏனையவர்கள் கேலியாக சித்தரிக்கின்ற வகையில் மாகாண சபையின் நிர்வாகம் இருப்பதாகவும் கூறினார்.

ஒரு மாத கால கட்டாய விடுமுறை விதிக்கப்பட்டமையே இத்தனை பிரச்சினைக்கும் காரணமாக அமைந்துள்ளது எனவும், மேலும் சில முக்கிய நபர்களுக்கு எதிராக சில சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts