Ad Widget

முடிந்தளவுக்கு மஹிந்தவை தோற்கடிப்போம் – கஜதீபன்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எங்களால் முடிந்தளவுக்கு தோற்கடிக்கவேண்டும் என வடமாகாண ஆளுங்கட்சி உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்தார்.

p-kajatheepan

பொது நிறுவனங்களின் 2015ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான முன்மொழிவு கூட்டம், வலிகாமம் கிழக்கு பிரதேச சபை கேட்போர் கூட்டத்தில் சனிக்கிழமை (03) இடம்பெற்றபோது, அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே கஜதீபன் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

எமது வீட்டுக்குள் இரண்டு விஷ பாம்புகள் நுழைந்து இருக்கின்றன. ஓன்று தீண்டினால் உடனடியாக எங்களுக்கு மரணம். இன்னொன்று தீண்டினால் சிறிது காலம் செல்லத்தான் எங்களுக்கு மரணம் எற்படும். அதற்கு நாங்கள் மருத்துவரையும் நாடமுடியும்.

இவ்வாறு தான் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலையும் நாங்கள் பார்க்கிறோம். ராஜபக்ஷ என்கின்ற கொடிய விஷமுள்ள பாம்பு தீண்டினால், உடனடியாகவே மரணம் சம்பவிக்கும்.

மைத்திரிபால சிறிசேன என்கின்ற கொடிய விஷமுள்ள பாம்பு தீண்டினால் நாங்கள் சிறிதுகாலம் தாக்குபிடிக்கமுடியும்.

மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்து வாக்களியுங்கள் என அடுத்தகட்ட தயார்படுத்தலுக்காகதான் நாம் கேட்கிறோம்.

மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்து வாக்களிக்காமல், அல்லது வாக்களிக்காமல் இருந்து கொள்வதென்பது, மகிந்த ராஜபக்ஷவை வெற்றி கொள்வதற்காக செய்யப்படுகின்ற விடயம் என்பதை நாம் பகிரங்கமாக சொல்லி கொள்கிறோம்.

தமிழத் தேசியக் கூட்டமைப்பின் ஏகபிரதிநிதிகளாக இருக்கக்கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு முடிவு எடுத்திருக்கின்றது.

எமது தலைவராக இருக்கக்கூடிய இரா.சம்பந்தன் முடிவு எடுத்திருக்கிறார். ஒரு இனம் விடுதலை பெறவேண்டுமானால், அல்லது ஒரு இனம் போராட்டத்தை நடத்திக்கொண்டு இருக்கின்றதானால், அந்த போராட்டத்தில் இருக்கக்கூடிய போராளிகள், தலைவர் என்ன சொல்லுகிறாரோ, அதை செய்யவேண்டும்.

அப்படி இருப்பவர்கள் தான் போராட்ட இயக்கத்திலே போராளிகளாக இருக்கமுடியும். இல்லாவிட்டால் போராளியென்ற அடிப்படை தகுதியை இழந்துவிடுகிறார்கள்.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் நீங்கள் அனைவரும் சென்று வாக்களிக்கவேண்டும். மைத்திரிபால சிறிசேன மீது நாங்கள் காதல் கொண்டு அவரை அரியணையில் ஏற்றி அழகு பார்க்கவேண்டும் என்பதற்காக அல்ல. வரப்போகும் தேர்தல் எந்த ஜனாதிபதி தேர்தல் எந்த எதிரியை தீர்மானிக்கப்போகின்ற தேர்தல். எதிரிகளை என்பதல்ல, எதிரிகளிலேயே எந்த எதிரியை தீர்மானிக்கவேண்டும் என்பது தான் எங்களுக்கு இப்போதுள்ள பிரச்சினை என அவர் தெரிவித்தார்.

Related Posts