Ad Widget

முச்சக்கர வண்டி சாரதிகள் கட்டுப்பாடு இல்லாமல் கட்டணங்களை அறவிடுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் : சி.தவராசா

வடக்கில் உள்ள முச்சக்கர வண்டி சாரதிகள் கட்டுப்பாடு இல்லாமல் கட்டணங்களை அறவிடுவதை கட்டுப்படுத்த வடமாகாண முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா விசேட கவனயீர்ப்பு பிரேரணையை முன் மொழிந்தார்.

வடமாகாண சபையின் 109ஆவது அமர்வு நேற்றய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

யாழ்ப்பணத்தில் முச்சக்கர வண்டி சாரதிகள் கட்டுப்பாடின்றி கட்டணங்களை அறவிட்டு வருகின்றனர். இதனால் பெரிதும் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கொழும்பில் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்தப்பட்டு ஒரு கட்டுப்பாட்டுக்குள் சாரதிகள் உள்ளனர். இதே இங்கே அந்த நடைமுறைகள் எதுவும் இல்லை. தங்கள் எண்ணப்படி கட்டணங்களை அறவீடு செய்கின்றனர்.

கொழும்பில் 50 ரூபாய்க்கு பயணம் செய்யும் அதேயளவு தூரத்திற்கு இங்கே 300 ரூபாய் அறவீடு செய்கின்றனர். எந்த நடைமுறையும் கட்டுபாடும் இன்றி தங்கள் எண்ணம் போல ஒருவருக்கு ஒருவர் வித்தியாசமான முறைகளில் கட்டணங்களை அறவீடு செய்கின்றனர்.

அதேவேளை கொழும்பில் இருந்து அதிகாலை வேளைகளில் பேருந்துக்களில் வந்து இறங்கும் பயணிகளின் பொதிகளை வலுக்கட்டாயமாக எடுத்து சென்று தங்கள் முச்சக்கர வண்டியில் ஏற்றுகின்றனர். வலுக்கட்டாயமாக பயணிகளை ஏற்றி செல்கின்றார்கள்.

இவ்வாறான செயற்பாடுகளை கட்டுக்குள் கொண்டு வந்து இங்குள்ள முச்சக்கர வண்டிகளுக்கும் மீற்றர்கள் பொறுத்தப் பட்டு கட்டணங்கள் ஒரு கட்டுக்குள் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என தெரிவித்தார்.

அதன் போது கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர் ஜெயத்திலக இது தனியே யாழ்ப்பணத்தில் மாத்திரம் உள்ள பிரச்சனையில்லை. வடமாகாணம் முழுவதும் இந்த பிரச்சனை உள்ளது. எனவே வடமாகணம் முழுவதும் சேவையில் உள்ள முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர்கள் பொறுத்தப்பட்டு கட்டணங்களை ஒரு கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என தெரிவித்தார்.

Related Posts