Ad Widget

முச்சக்கரவண்டி உரிமையாளர்களின் குடும்ப நலன்காக்கும் வகையில் ஒய்வூதியத் திட்டம்

யாழ்.மாவட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர்களின் குடும்ப நலன்காக்கும் வகையில் ஒய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்தும் அதேவேளை, தொழில் வருவாயை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

minisert 20.07.2014 03

யாழ்ப்பாணம் இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தில் நேற்றய தினம் (20) இடம்பெற்ற யாழ்.மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர்களின் குடும்ப நலன்காக்கும் மரண சகாய நிதி உதவித்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், முச்சக்கரவண்டி உரிமையாளர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு நம்பிக்கையூட்டக்கூடிய வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்நிதியுதவித்திட்டம் சிறப்பாக அமைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்பதுடன், இத்திட்டத்திற்கு எனது ஆதரவு எப்போதும் கிடைக்கும்.
அந்தவகையில் நீடித்த நிலையானதொரு திட்டத்தை செயற்படுத்தவே நான் விரும்புகின்றேன்.

இந்நிலையில் யாழ்.மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர்களின் குடும்ப நலன்காக்கும் மரண சகாய நிதி உதவித்திட்டம் மட்டுமல்லாது எதிர்காலத்தில் ஒய்வூதிய திட்டத்தை அமுல்படுத்துவது, தொழில்வருவாயை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நான் முன்னெடுக்கவுள்ளேன்.

இவ்வாறான செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கு சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அனைவரது ஒத்துழைப்பும் ஒத்தாசையும் அவசியமானது என்று சுட்டிக்காட்டிய அமைச்சர் அவர்கள், முன்னொரு காலத்தில் தமிழகத்தில் முதல்வராகயிருந்த எம்.ஜி ஆர் அவர்கள் சத்துணவுத்திட்டத்தை அறிமுகப்படுத்திய போது அதை அக்காலகட்டத்தில் பலரும் எள்ளிநகையாடியிருந்தனர்.

ஆனால், அவரது கொள்கையில் முன்னெடுக்கப்பட்ட அத்திட்டம் இன்றுவரை நடைமுறையில் உள்ளதாகவும், அதுபோன்று எம்மால் அறிமுகப்படுத்தப்படும் முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கான மேம்பாட்டு செயற்திட்டங்களும் முன்னெடுக்க முடியுமென்ற நம்பிக்கை எமக்குள்ளது என்றும் தெரிவித்தார்.

நாம் மக்களுடைய அபிவிருத்தியை மட்டுமல்லாது இணக்க அரசியல் ஊடாக அரசியல் உரிமைகளையும் வென்றெடுக்க முடியும் என்ற நம்பிக்யின் பிரகாரம் மக்களின் சார்பில் நான் அரசில் அங்கம் வகிக்கின்றேன் என்பதுடன் எதிர்காலத்தில் மேலும் பல அபிவிருத்திகளையும் முன்னெடுக்க முடியும்.

அந்தவகையில், யாழ்.மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் மட்டுமல்லாது எமது மக்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்தி அதை மேம்படுத்திக் கொள்ளும் வகையிலான செயற்திட்டங்களையும் முன்னெடுப்பதற்கும் நாம் தயாராகயிருக்கின்றோம்.

அதுமட்டுமன்றி இச்சங்கத்தின் வளர்ச்சிக்காக பல்துறைசார்ந்தோருடன் கலந்துரையாடி உரிய தீர்வு பெற்றுத் தரப்படும் அதேவேளை, சங்கத்தினர் எதிர்கொள்ளும் ஏனைய பிரச்சினைகளுக்கும் உரியதீர்வு காணப்படும் என்பதுடன் இதற்கு நீங்கள் யாவரும் சரியான பக்கம் நின்று மக்களுக்கு வழிகாட்டும் அதேவேளை, சிறந்த சேவைகளை ஆற்ற வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

சங்கத் தலைவர் மனோகரராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சங்கத்தின் செயற்பாட்டு திட்டம் தொடர்பாக பரமராஜா எடுத்து விளக்கினார்.

நிகழ்வில் யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசாவும் உரைநிகழ்த்தினார்.

இதில் முச்சக்கர வண்டி உரிமையாளர்களின் குடும்ப நலன்காக்கும் மரண சகாய நிதி உதவித்திட்டத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

இதன்போது இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய பிரதான பொதுமுகாமையாளர் அஸ்ஹர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட பிரதான பொறியியலாளர் சுதாகர், மாவட்ட தனியார் பேரூந்து சங்கத் தலைவர் கெங்காதரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Posts