Ad Widget

முச்சக்கரவண்டிகளுக்கு QR குறியீடு!!

தற்போது முச்சக்கரவண்டி சாரதிகளாக கடமையாற்றும் அனைவரும் பதிவு செய்யப்பட்டு தரவு முறைமையை உருவாக்குவதற்கான QR குறியீட்டை அறிமுகப்படுத்தும் யோசனையை கருத்தில் கொண்டு, மிகக் குறுகிய காலத்திற்குள் புதிய குறியீட்டை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான தொழிற்சங்கங்களை ஸ்தாபிப்பதற்கான முதற்கட்டமாக நேற்று (16) இடைக்கால துறை வழிநடத்தல் குழு ஸ்தாபன நிகழ்வில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

மேலும், முச்சக்கரவண்டி சாரதிகளுக்காக ஸ்தாபிக்கப்பட்ட நிபுணத்துவ அமைப்பினால் முச்சக்கரவண்டி சாரதிகள் இணையத்தின் ஊடாக பயணத்தை பெற்றுக்கொள்ளும் முறைமையொன்றை தயாரிப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கையில் முறைசாரா துறையில் பணிபுரியும் அனைவருக்கும் தொழில் கௌரவத்தையும் பெருமையையும் வழங்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட “கரு சரு” திட்டத்தின் கீழ் இந்த வழிநடத்தல் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் இந்தக் குழு உருவாக்கப்பட்டது.

நாட்டில் இயங்கிவரும் அனைத்து முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் அடங்கிய தீர்மானம் மற்றும் அவர்களின் தொழில் கௌரவத்தை மேம்படுத்துவது தொடர்பாக முன்னைய கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்ட விடயங்கள் அடங்கிய தீர்மானமும் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

Related Posts