Ad Widget

விளக்கமறியல் நீடிப்பு

judgement_court_pinaiஅச்சுவேலி, கதிரிப்பாய் பகுதியில் கடந்த 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற முக்கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை எதிர்வரும் ஜுன் 13ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஜோய் மகிழ்மகாதேவா உத்தரவிட்டார்.

மேற்படி வழக்கு நேற்று (30) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.

அச்சுவேலி, கதிரிப்பாய் பகுதியில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் மகள் மூவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

நிக்குநானந்தன் அருள்நாயகி (50), யாசோதரன் மதுசா (27), நிக்குநானந்தன் சுபாங்கன் (19) ஆகிய மூவரும் பலியாகியிருந்ததுடன் தனஞ்செயன் தர்மிகா (25), க.யசோதரன் (30) ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.

தொடர்ந்து இக்கொலைகளுடன் தொடர்புடையவரென, படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தர்மிகாவின் கணவரான பொ.தனஞ்செயன் ஊரெழு பகுதியில் வைத்து கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு அச்சுவேலிப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதேவேளை இந்த கொலைக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டியினையும் பொலிஸார் கைப்பற்றியதுடன் முச்சக்கரவண்டி உரிமையாளரினையும் அச்சுவேலிப் பொலிஸார் கைது செய்திருந்ததுடன் கொலைக்கும் அவருக்கும் தொடர்பில்லை என்பதினை விசாரணைகளில் அறிந்த பொலிஸார் அவரை பொலிஸ் பிணையில் விடுவித்திருந்தனர்.

தர்மிகாவின் சகோதரியும் இந்த வாள்வெட்டில் பலியாகியிருந்தவருமான மதுசாவினை இரண்டாவதாகத் திருமணம் செய்ய முடியாத நிலையிலே குறித்த நபர் (தர்மிகாவின் கணவர்) மேற்படி படுகொலையினைச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பூநாறி மரத்தடியில் வைத்து இருவர் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஐவர் தலைமறைவாகியுள்ளதாகவும் அவர்கள் தொடர்பான புலன்விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் யாழ். பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியசட்கர் டி.எம்.திலகரட்ண தெரிவித்தார்.

யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் நேற்று இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

மேற்படி வாள்வெட்டிற்கு இலக்கானவர்கள் இருவரும் தம்மீது வாள்வெட்டு மேற்கொண்டவர்களில் 6பேர் தொடர்பான பெயர் விபரங்களை வாக்குமூலமாகத் தந்தனர். அதன்படி புலன்விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதில் கொக்குவிலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு யாழ். நீதவான் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மற்றைய ஐவரும் தலைமறைவாகியுள்ளதாகவும் அது தொடர்பான புலன்விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்போது, ‘இந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் ஆவாக் குழுவில் உள்ளவர்களுக்கு தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன. அது உண்மையா? என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த திலகரட்ண, ‘குறித்த இருவரும் தங்கள் வாக்குமூலத்தில் ஆவாக் குழுவினைச் சேர்ந்தவர்களும் தங்கள் மீது வாள்வெட்டினை மேற்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளனர். எனினும் ஆவாக் குழுவினர் சம்பந்தப்பட்டனரா? என புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்.காங்கேசன்துறை வீதி, பூநாறி மரத்தடிப் பகுதியில் முச்சக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்த இரு இளைஞர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் கடந்த செவ்வாய்க்கிழமை (20) சரமாரியான வாள்வெட்டினை மேற்கொண்டது.

இதில் கொக்குவிலினைச் சேர்ந்தஇரு இளைஞர்கள் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 6 மோட்டார் சைக்கிள்களில் வாள்கள் மற்றும் கோடாரிகளுடன் வந்த 10பேர் கொண்ட கும்பல் மஞ்சவனப் பகுதியில் வைத்து முச்சக்கரவண்டியில் வந்த இந்த இருவர் மீதும் தாக்குதல் மேற்கொள்ள முனைந்துள்ளனர்.

எனினும், அவர்கள் தப்பித்து காங்கேசன்துறை வீதி வழியாக வந்துகொண்டிருந்த போது ஒரு கிலோமீற்றர் தூரத்தில் இருக்கும் பூநாறி மரத்தடியில் முச்சக்கரவண்டியினை இடைமறித்த அந்தக் கும்பல், முச்சக்கரவண்டியில் இருந்த இருவர் மீதும் சரமாரியான வாள் மற்றும் கோடாரி வெட்டுத் தாக்குதல் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts