Ad Widget

மீள்குடியேற்றம் தொடர்பில் தீர்வு காணவேண்டும் – சுரேஸ்

‘தமிழ் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் அரசு தீர்வு காணவேண்டும். குறுகிய அரசியல் இலாபங்களுக்காக தமிழ் மக்கள் இன்னமும் முகாம்களில் தமது வாழ்வை தொடரவேண்டிய நிலை இருக்கக்கூடாது’ என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

suresh

யாழ்.தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் ‘இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும் நல்லாட்சிக்கான மக்கள்’ கலந்துரையாடல் நாவலர் கலாசார மண்டபத்தில் புதன்கிழமை (04) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துரை வழங்குகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

‘இலங்கையின் 67 ஆவது சுதந்திரதினம் இன்று கொண்டாடப்படுகின்றது. ஆனால் எல்லா தரப்பினருக்கும் சுதந்திரம் இல்லை. குறிப்பாக தமிழ் மக்களுக்கு சுதந்திரம் இல்லை. 100 நாள் வேலைத்திட்டம் பற்றி பேசுகிறார்கள். தமிழ் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு தொடர்பாக எதுவும் இல்லை என்பது உண்மை.

கடந்த ஆட்சி, ஊழல் மலிந்த ஆட்சியாக காணப்பட்டது. அனைவரும் இணைந்து செயற்பட்டு ஆட்சியை மாற்றினார்கள். ஜனாதிபதி தேர்தல் முடிந்த பின்னர் தமிழர் பிரச்சினை தொடர்பாக புதிய அரசின் பலதரப்புக்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தியது. 100 நாள் வேலைத்திட்டத்தின் போது, முழுமையாக இல்லாவிடினும் சிறிதளவேணும் மக்கள் மீள்குடியமர்த்தப்படவேண்டும் என்று கோரியுள்ளோம்.

வலிகாமம் வடக்கு மட்டுமல்ல, பல தமிழ் பிரதேசங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படவேண்டும் என்று தெரிவித்தோம். செல்வந்தர்கள் விளையாடும் கோல்ப் மைதானத்தை பலாலி பகுதியில் இராணுவத்தினர் அமைத்துள்ளனர். யாழில் அவ்வாறு பெரிய செல்வந்தர் யார் உள்ளனர். அங்கு மக்களின் குடியிருப்புக்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு காணிகள் அனைத்தும் வெறும் தரையாகவுள்ள நிலையில், ஏன் மீள்குடியேற்றத்தில் காலதாமதம் தேவை என்று அரசிடம் கேட்டுள்ளோம்.

மீள்குடியேற்றம் தொடர்பில் அரசு முழுமையாக கவனம் செலுத்தி, அரசியல் தீர்வையும் முதலில் எடுக்கவேண்டும். இராணுவத்தினருடன் கலந்துரையாட வேண்டிய தேவையில்லை. அரசு முடிவை எடுத்தபின்னர் இராணுவத்தினருக்கு உத்தரவு பிறப்பிக்க முடியும்.

இவ்வாறு ஒரு தீர்வும் எடுக்காமல் இருக்கும் பட்சத்தில் இப்பிரச்சினைகள் யாவும் முற்றுபறாது இருக்கும். தமிழ்மக்களின் மீள்குடியேற்ற பிரச்சினைக்கு தீர்வு தற்போது எடுக்கப்பட்டால் தென்னிலங்கை ஆதரவாளர்களிடம் அரசு தனது ஆதரவை இழந்துவிடும் என்பதற்காகவும், வடக்கில் புலியை உருவக்க அரசு செயற்படுகின்றது என்று சிங்களவர்கள் மத்தியில் பேச்சு அடிபட ஆரம்பித்து விடும் என்ற குறுகிய அரசியல் இலாபத்துக்காக மக்கள் முகாம்களில் கஸ்டப்படவேண்டிய அவசியம் இல்லை.

இதே மீள்குடியேற்றப பிரச்சினை தெற்கில் காணப்பட்டால் அரசின் பார்வை எவ்வாறு இருக்கும். இதனை அரசு சிந்தித்து பார்க்கவேண்டும்.

முன்னைய ஆட்சியில் இருந்த நிலை மைத்திரியின் ஆட்சியில் இருக்கக்கூடாது என்பது தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு. இந்த 100 நாள் வேலைத்திட்டத்தில் மற்றைய பிரச்சினைகளுக்கான தீர்வை முன்னெடுக்கும் அரசு ஏன் தமிழ் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் கவனம் செலுத்த இயலாது? இன்னமும் காலம் கடத்தாமல் தீர்வை தரவேண்டும். இல்லையென்றால் மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள்’ என்றார்.

தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, வலிகாமம் வடக்கு தவிசாளர் சோ.சுகிர்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Posts