Ad Widget

மீன்தொட்டிக்கு 37 கோடி ரூபா! ஒரு மீனுக்கு ரூ.65 ஆயிரம்!! மஹிந்தவின் வீண் செலவுகளை பட்டியலிடுகிறார் சம்பிக்க!!!

மஹிந்த அரசால் கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட மிதக்கும் சந்தை, சுதந்திர சதுக்க கட்டிடத்தொகுதி முதலான அபிவிருத்தித் திட்டங்களால் பல கோடி ரூபாக்கள் நட்டம் மட்டுமே ஏற்பட்டது என பாரிய கொள்கைத் திட்டங்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

mahinda

உலக குடியிருப்புத் தினத்தை முன்னிட்டு, கொழும்பு பிரதீபா மண்டபத்தில் நேற்று நடைபெற்ற விசேட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மஹிந்த அரசு காலத்தில் கொழும்பில் பல்வேறு வகையான அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக, மிதக்கும் சந்தை, சுதந்திர சதுக்க கட்டடத்தொகுதி என்பவை நிர்மாணிக்கப்பட்டன.

எனினும், இதன்மூலம் அரசுக்கு பல மில்லியன் ரூபா நட்டம் மட்டுமே ஏற்பட்டது. அதிலும் சுதந்திர சதுக்க வளாகத்தில் அமைக்கப்பட்ட மீன் தொட்டிக்கு மாத்திரம் 37 கோடி ரூபாவை அரசு செலவிட்டது. அதில் விடப்பட்ட ஒரு மீனின் விலை 65 ஆயிரம் ரூபாவுக்கும் மேற்பட்டது.

இவ்வாறான திட்டங்கள்மூலம் பல கோடி ரூபாக்களை இழந்தது மட்டுமே மிச்சமாகும். அதாவது, கொழும்பு ஒரு வெள்ளை யானை போலவே காட்சியளிக்கின்றது.

எனினும், எமது அரசோ இலங்கையை தொழில்நுட்ப கேந்திர நிலையமாக மாற்றுவதையே குறியாகக் கொண்டுள்ளது.

இதற்காக கொழும்பில் துறைமுக நகரத்திட்டமும், கட்டுநாயக்கவில் விமானநிலைய நகரத்திட்டமும், ஹோமாகமயில் தொழில்நுட்ப நகரத்திட்டமும் மேற்கொள்ளப்படவுள்ளன.

சொல்லப்போனால், இது மகாவலி அபிவிருத்தித் திட்டத்தைப்போன்ற பிரம்மாண்ட திட்டமாகவே இருக்கும். இதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து கட்சிப் பேதம் பார்க்காது உழைக்கத் தயாராகவே இருக்கிறோம்” – என்றார்.

Related Posts