Ad Widget

மீனவர் விவகாரம்: 7அம்ச கோரிக்கைகள் குறித்து மே முடிவு

இலங்கை- தமிழக மீனவ பிரதிநிதிகளிடையே சென்னையில் நடந்த 3ஆம் கட்ட பேச்சுவார்த்தையில், தமிழக மீனவர்கள் முன்வைத்த 7 கோரிக்கைகள் குறித்து மே மாதத்தில் முடிவை அறிவிப்பதாக இலங்கை மீனவ பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்திய – இலங்கை மீனவர்களுக்கிடையேயான 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், இரு நாட்டு மீனவர் பிரதிநிதிகள், அதிகாரிகள் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

காலை 11 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை இரவு 8 மணிக்கு முடிவடைந்தது. பேச்சு வார்த்தையின் பின்னர், தமிழக மீனவர்கள் சார்பில் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற அருளானந்தம் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

ஏற்கெனவே நடைபெற்ற 2 கட்ட பேச்சுவார்த்தைகளின்போது முடிவு ஏதும் எட்டப்படவில்லை. 3ஆவது கட்ட பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது. தமிழக மீனவர்கள் சார்பில், வருடத்துக்கு 83 நாட்கள் இலங்கை கடல்பகுதியில் மீன் பிடிக்கும் உரிமை, இரட்டைமடி, சுருக்குமடி வலைகளை பயன்படுத்த அனுமதி உட்பட 7 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தோம்.

இலங்கையில், அடுத்த மாதம் நடக்கவுள்ள மீனவர்கள் மாநாட்டில் இந்தக் கோரிக்கைகள் குறித்து ஆலோசித்து ஒப்புதல் பெறுவதாகவும், இணக்கமான சூழல் உருவாகும் என்றும் இலங்கை மீனவர்கள் தெரிவித்தனர். எங்கள் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு, அவற்றை பரிசீலிப்பதாக உறுதியளித்தனர் என அவர் கூறினார்.

இலங்கை மீனவர்கள் சார்பில் பங்கேற்ற சதாசிவம் கூறியதாவது, பேச்சுவார்த்தை மிகவும் சுமுகமாக நடந்தது. 7 அம்ச கோரிக்கைகளை இந்திய மீனவர்கள் முன்வைத்தனர். இலங்கையை பொறுத்தவரை 30 ஆண்டுகள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதி ஆகும். ஏப்ரல் முதல் வாரத்தில் வடக்கு, கிழக்கு மீனவர் உயர்மட்ட மாநாடு நடக்கவுள்ளது. இதில், வடக்கு கிழக்கு மாகாண பிரஜைகள், மீனவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்கின்றனர். இந்திய மீனவர்கள் முன்வைத்த கோரிக்கைகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதித்து மே மாதம் முடிவு அறிவிக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

Related Posts