Ad Widget

மீனவர் பிரச்சினையை தீர்க்க இந்தியாவுடன் கூட்டு ரோந்து, ஜெயலலிதாவுடன் பேச்சு! – சம்பந்தன் வலியுறுத்தல்

இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பாக ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசுடனும் இலங்கை அரசு பேச்சுகளை நடத்த வேண்டும் என்றும், இந்தியக் கடற்படையுடன் இணைந்து கூட்டு ரோந்து நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றில் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுவதால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் மேலும் கூறுகையில், மீனவர் பிரச்சினை முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாக இருக்கின்றது. யுத்தம், முரண்பாடு நிலவிய காலங்களில் வடக்கு, கிழக்கு மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடவில்லை. இந்தக் காலப்பகுதியில் இந்திய மீனவர்கள் இங்குவந்து தாராளமாக மீன்பிடியில் ஈடுபட்டனர்.

2009ல் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து, எமது மக்கள் மீன்பிடித்தொழிலை ஆரம்பித்தனர். தொழில் இல்லாத காரணத்தால் எமது மக்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டிருந்தனர். பெரும் கடனில் வாழ்ந்தனர். இந்திய மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடியில் ஈடுபடுகின்றனர். அவர்களது பொறிமுறை மிக மோசமான சேதங்களை ஏற்படுத்தியது. எமது வலைகள், மீன்பிடி உபகரணங்களுக்கு சேதங்களை ஏற்படுத்தியது. அடிமடிப் படகால் (பொட்டம் ரோலர்) எமது கடல்வளம் சுரண்டப்படுகிறது. மீன் உற்பத்திக்கான சூழல் இல்லாமல் போகின்றது.

இவ்வாறான நிலையில், வடக்கு, கிழக்கு மீனவப் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதியைச் சந்தித்து இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடினேன். இதன்போது எடுக்கப்பட்ட சில தீர்மானங்களுக்கமைய இந்திய மீனவர்களின் வருகை தடுக்கப்பட்டது. துரதிஷ்டவசமாக அந்த நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், என்ன செய்யவேண்டும் என்று தீர்மானிக்கவேண்டும். இந்த விடயம் இரு நாட்டு மக்களிடமும் பகை உணர்வை ஏற்படுத்துகிறது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இரு நாட்டு கடற் பாதுகாப்புப் படைகள் கூட்டு ரோந்து நடவடிக்கையில் ஈடுபடவேண்டும். இலங்கைக் கடற்படை, இந்தியக் கடற்படை, இந்தியக் கடலோர பாதுகாப்புப் படை ஆகிய மூன்றும் இணைந்து இந்தக் கூட்டு ரோந்து நடவடிக்கையை முன்னெடுக்கவேண்டும். வெளிவிவகார அமைச்சு டில்லியுடன் மட்டுமல்லாது, தமிழ்நாட்டுடனும் முத்தரப்புப் பேச்சுகளை நடத்தவேண்டும். இலங்கை – தமிழகப் பிரதிநிதிகள் இணைந்து பேச்சு நடத்தி தீர்வு காணவேண்டும்.

வெளிவிவகார அமைச்சு இந்த விடயத்தை தீவிரமாகக் கருத்திற்கொண்டு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இதனால் எமது மக்கள் பாதிக்கப்படுகின்றனர். தொடர்ந்தும் கடனில் அவர்கள் வாழமுடியாது. எனவே, டில்லியிலுள்ள மத்திய அரசுடன் மட்டுமன்றி, தமிழ்நாட்டில் ஜெயலலிதா தலைமையிலான மாநில அரசுடனும் பேச்சு நடத்தி விரைவாகவும், அவசரமாகவும் தீர்வு காண வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

Related Posts