Ad Widget

மீனவர்கள் மீதான தாக்குதலைக் கண்டிக்கின்றது புதிய ஜனநாயக மார்ச்சிச லெனினிசக் கட்சி

இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறிப் புகுந்த இந்திய மீனவர்கள், இலங்கைத் தமிழ் மீனவர்களை ஆயுதங்களால் தாக்கிப் படுகாயப்படுத்தியிருக்கிறார்கள். இதனைக் கண்டித்து புதிய ஜனநாயக மார்ச்சிச லெனினிசக் கட்சி (NDMLP) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை:

நேற்று முன்தினம் (27-02-2015) வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டு வந்த நூற்றுக் கணக்கான இழுவைப் படகுகளில் இந்திய மீனவர்கள் அத்துமீறிப் பிரவேசித்து, கூரிய ஆயுதங்கள் கொட்டான்கள் வலைக்குக்கட்டும் ஈயக்குண்டுகள் போத்தல்கள் என்பவற்றைப் பயன்படுத்தி, மீன்பிடியில் ஈடுபட்டிருந்த எமது மீனவர்களைப் படுமோசமான முறையில் தாக்கிப் படுகாயங்கள் விளைவித்துள்ளார்கள். அத்துடன் துப்பாக்கி வேட்டுக்களையும் தீர்த்து அச்சுறுத்தியதுடன் எமது மீனவர்களின் மீன் வலைகளையும் வெட்டி நாசம் செய்துவிட்டு சென்றுள்ளனர். இக்கொடுரச் சம்பவத்தை எமது புதிய ஜனநாயக மாக்சிச-லெனினிசக்கட்சி மிக வன்மையாக கண்டிக்கிறது இச்சம்பவம் பற்றி வடமாகாணா, மத்திய அரசாங்கங்கள் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். என வற்புறுத்துகின்றது.

இந்திய இழுவைப் படகுகளில் எமது கடல் பரப்பில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடிப்போர் சாதாரண இந்திய மீனவர்கள் அல்லர் பெரும் மீன் முதலாளிகளின் கையாட்களே ஆவர். கடந்த வியாழக்கிழமையன்று நூறு ட்ரோலர் படகுகளில் வந்து மீன் கொள்ளையில் ஈடுபட்டது மட்டுமில்லாமல் எமது மீனவர்களைக் கடும் காயப்படுத்திய செயலை எவரும் தட்டிக்கழித்துவிட முடியாது. இத்தகைய அத்துமீறல் ட்ரோலர் மீன் பிடியையும் எமது மீனவர்களைக் கண்மூடித்தனமாக தாக்குவதையும் வலைகளை வெட்டி நாசப்படுத்துவதையும் தடுத்து நிறுத்துவதற்கு மாகாணசபை ஆட்சியும் மத்திய ஆட்சியினரும் பாராமுகம் காட்டாது உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். எமது மீனவர்களையும் அவர்களது தொழிலையும் பாதுகாத்து வாழ்வாதாரத்திற்கான தொழிற் பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என நாம் வற்புறுத்துகின்றோம்.


கா.செல்வம் .கதிர்காமநாதன்
வடபிரதேசச் செயலாளர்
புதிய ஜனநாயக மார்ச்சிச லெனினிசக் கட்சி
01.03.2015

இவ்வாறு ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Posts