Ad Widget

மீனவரின் படகை மோதிய கடற்படையினர் 8பேர் கைது

யாழ்.எழுவைதீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவரின் படகை மோதி, அந்த மீனவர் உயிரிழக்க காரணமாகவிருந்தார்கள் என்ற சந்தேகத்தில் 8 கடற்படையினரை புதன்கிழமை (11) கைது செய்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி கியூ.ஆர்.பெரேரா தெரிவித்தார்.

கடந்த டிசெம்பர் மாதம் 18ஆம் திகதி இரவு, எழுவைதீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர் ஒருவரின் படகு மீது, கடற்படையின் டோறா ரக படகொன்று மோதியதில் மீனவரின் படகு சேதமடைந்தது. அத்துடன், சம்பவத்தில் படுகாயமடைந்த எழுவைதீவு 4ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த அன்ரனி யேசுதாஸ் (வயது 60) என்ற மீனவர், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பில் மீனவரின் உறவினர்கள் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்டு, காரைநகர் கடற்படை முகாமைச் சேர்ந்த 8 கடற்படையினரை கைது செய்ததாக பொறுப்பதிகாரி கூறினார்.

Related Posts