Ad Widget

மீண்டும் போர் ஏற்படாத வகையில் இன நல்லிணக்கம் ஏற்படுத்தப்படும்! – ஜனாதிபதி

“இலங்கையில் மீண்டுமொரு யுத்தம் ஏற்படாத வகையில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும், நட்புறவையும் கட்டியெழுப்புவதற்கு காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இது விடயத்தில் அரசு அர்ப்பணிப்புடன் தெற்கையும் இன, மொழி,மதம் ரீதியாக ஒன்றிணைக்கும் முயற்சிக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஜனாதிபதிக்குரிய முழு அதிகாரங்களையும் நாடாமன்றத்துக்கு வழங்கி சட்டவாக்கச் சபையைப் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு தற்போது எதிரி என்று எந்தவொரு நாடோ, அமைப்போ இல்லை என்றும் ஜனாதிபதி கூறினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதி செலவீன தலைப்புகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு:-

“ஐக்கிய தேசியக் கட்சியின் பங்களிப்புடன் 47 அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகளின் ஆசியுடனேயே ஜனவரி 8ஆம் திகதி ஜனாதிபதியானேன். பதவியேற்ற பின் வழங்கப்பட்ட உறுதிமொழிகளின்படி செயற்பட்டு வருகின்றேன். அதிலிருந்து திசை மாறி பயணிக்காது மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதே எனது இலக்காகும். அந்தவகையில், ஜனாதிபதிக்குரிய நிறைவேற்று அதிகாரங்களைக் குறைத்துள்ளேன். சில அதிகாரங்களை நீக்குவதுபற்றி சர்வஜன வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததால் அதிகார குறைப்பின் உச்சத்துக்கே செல்லமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

முன்னாள் அரசிடம் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் இருந்தது. எனினும், மக்களுக்குச் சார்பான சட்டங்களை இயற்றுவதற்கு அந்த அதிகாரம் பயன்படுத்தப்படவில்லை. மாறாக, உலகில் எந்தவொரு அரச தலைவரிடமும் இல்லாத வகையில், ஜனாதிபதியின் அதிகாரங்களை பலப்படுத்துவதற்காகவே அது பயன்படுத்தப்பட்டது. ஆனால், அன்று 18ஐ ஆதரித்தவர்கள் அதற்கு எதிரான வகையில் இன்று 19ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்தமை சந்தோஷமளிக்கின்றது.

அத்துடன், சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்டுள்ளன. தேர்தல் ஆணைக்குழு அமைக்கப்பட்டதன் ஊடாக நாட்டுமக்களின் 40 வருடகால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. தேர்தல் விடயத்தில் இரு பிரதான அரசியல் கட்சிகளுக்கும் கறுப்புப் புள்ளிகள் இருக்கின்றன. எனினும், இனி சுயாதீன வாக்குரிமை பாதுகாக்கப்படும்.

அத்துடன், அரசியல் அழுத்தங்களின்றி நீதித்துறை கம்பீரமாகச் செயற்படுகின்றது. நீதிபதிகள் சுயாதீனமாகத் தீர்ப்புகளை வழங்குகின்றனர். இது நல்லாட்சிக்குக் கிடைத்த வெற்றியாகும். கடந்த காலங்களில் இலங்கையால் உலக நாடுகள் பிளவுபட்டன. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலும் பிளவு ஏற்பட்டது. ஆனால், இன்று அந்நிலை மாறியுள்ளது. உலக நாடுகள் நேசக்கரம் நீட்டுகின்றன. கைவிரித்துச் சென்ற நாடுகள் மீண்டும் எம்முடன் கைகோத்துள்ளன. சர்வதேச அரங்கில் இலங்கைக்கு எந்தவொரு எதிரி நாடும் இல்லை; சர்வதேச அமைப்புகளும் எதிரிகளாக இல்லை.

பலம்வாய்ந்த நாடுகளின் தலைவர்கள் முன்னர் இலங்கையின் அரச தலைவரைச் சந்திப்பதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. சந்தர்ப்பமும் வழங்கப்படாது. ஆனால், பொதுநலவாய மாநாட்டுக்கு சென்றிருந்தவேளை, ஒரு மணித்தியாலயத்துக்குள் பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் பிரதமர்களுடன் பேச்சு நடத்தினேன்.

இதில் குறிப்பாக, பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூனுடன் நடைபெற்ற சந்திப்பின்போது ஜி.எஸ்.பி. வரிச்சலுகை குறித்தும், மீன் ஏற்றுமதித் தடை பற்றியும் பேசப்பட்டது. இதன்போது, இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள மீன் ஏற்றுமதித் தடையை விரைவில் நீக்குவதற்குரிய விடயத்தில் தான் நேரடியாக தலையிடுவதாக கமரூன் உறுதியளித்தார். அத்துடன், இலங்கையின் அபிவிருத்திக்கு 6 பில்லியன் நிதியும் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அதேவேளை, யுத்தம் முடிவடைந்த பின்னர் செய்யவேண்டிய நிறைவேற்றப்படவேண்டிய விடயங்கள் நடைபெறவில்லை. மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதைத் தடுப்பதற்குரிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவேண்டும். இதற்காக அரசு அர்ப்பணிப்புடன் செயற்படும்.

வடக்கையும், தெற்கையும் இணைக்கவேண்டும். புரிந்துணர்வின்மை, சந்தேகம் ஆகியன களையப்படவேண்டும். இதயங்களை இணைக்கவேண்டும். இதற்கு அனைவரதும் ஆசீர்வாதம் அவசியம். தனிப்பட்ட தேவைகளுக்காக நான் விமர்சனங்களைப் பயன்படுத்துவதில்லை. சாதாரண பயணிகள் விமானத்திலேயே வெளிநாடு செல்கிறேன். எனது குடும்பத்தார் அரச வாகனங்களை பயன்படுத்த முடியாது. கடந்த ஆட்சியில் மலர்þவலயத்தில்கூட மோசடி இடம்பெற்றது. அந்த யுகத்தை நாம் ஒழித்துள்ளோம்” – என்றார்.

Related Posts