Ad Widget

மீண்டும் புலி முத்திரையா? – பிரபா எம்.பி கேள்வி

புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களை மீண்டும் கைது செய்து புலி முத்திரை குத்தியுள்ளமை ஏன் என்றும் அதற்கான விளக்கத்தை தருமாறும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன், பொலிஸ்மா அதிபரிடம் கோரியுள்ளார்.

pirapa-ganesan

இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர், விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யுத்தத்திற்கு பின்னர் கைது செய்யப்பட்ட புலி உறுப்பினர்களுக்கு பல வருடங்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டு சமூகத்துடன் மீண்டும் இணையவைத்தோம் என்று உள்நாட்டிற்கும் சர்வதேசத்திற்கும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஆனால், அரசாங்க காவல் படையினர் மீண்டும் அவர்களை புலி சந்தேக நபர்கள் என்று கூறி கைது செய்திருப்பதற்கான விளக்கத்தை தரவேண்டும்.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்களை இழிவுபடுத்தியும் உடனடியாக வெளியேறுமாறும் சுவர்களில் எழுதியும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அது மட்டுமின்றி பரீட்சை எழுதிக் கொண்டிருக்கும் மாணவர் ஒருவரை எவ்வித காரணமும் இன்றி கைது செய்துள்ளனர்.

முஸ்லிம் மக்களுக்கு எதிராக பொதுபல சேனா தனது செயல்பாடுகளை முன்னெடுத்து வருவது போன்று தமிழர்களுக்கு எதிராக பொலிஸார் முன்னெடுத்துள்ள இந்நடிவடிக்கைக்கு எனது பாரிய கண்டனத்தை பொலிஸ்மா அதிபருக்கு தெரிவித்துள்ளேன்.

புனர்வாழ்வளிக்கப்படுவது என்பது அவர்கள் சமூகத்தினரிடம் இணைந்து வாழ்வதற்கு எடுக்கப்படும் முன்னெடுப்பாகும். விடுதலைப்புலி போராளிகளை புனர்வாழ்வளித்து அவர்களை சமூகத்தினரிடம் இரண்டர கலக்கவிட்டுள்ளோம் என்று அரசாங்கம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் எடுத்து சொல்லி வருகிறது.

ஆனால், அரசாங்கத்திற்கு கீழ் வரும் பொலிஸார் இவர்களை மீண்டும் விசாரணைக்கென்று கைது செய்வது எவ்விதத்தில் நியாயமானது. இது அரசாங்கத்தின் போலி முகத்தை காட்டுகின்றதா என கேள்வி எழுகின்றது. புனர்வாழ்வளிக்கப்படுவது என்பதன் அர்த்தத்தை பொலிஸாருக்கு தெளிவுபடுத்த அரசாங்கம் பயிற்சி பட்டறை நடத்த வேண்டும்.

சப்ரகமுவ பல்கலைக்கழக விவகாரம் சம்பந்தமாக நியாயம் வழங்கப்பட வேண்டும். மீண்டும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறக் கூடாது. கல்வித்துறையில் தமிழ் மாணவர்கள் மீண்டும் தலைசிறந்து விளங்கக் கூடாது என்று திட்டமிட்டு ஒரு சிலர் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுகின்றார்கள். இது சம்பந்தமாக அரசாங்கம் மௌனம் சாதித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் பொலிஸ்மா அதிபருக்கு தொலைநகல் மூலம் விளக்கம் கோரியுள்ளேன். அவர், சரியான விளக்கத்தை கொடுக்க தவறும் பட்சத்தில் நாடாளுமன்றத்தில் இது சம்பந்தமாக கேள்வி எழுப்பவுள்ளேன் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

புனர்வாழ்வு பெற்ற தமிழ் மாணவர் கைது: பயங்கரவாதத் தொடர்பு என்று குற்றச்சாட்டு

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பரீட்சை எழுதிக் கொண்டிருந்த தமிழ் மாணவன் கைது!

Related Posts