Ad Widget

மீண்டும் ஆயுதங்களுடன் இராணுவ நடமாட்டம், மக்கள் அச்சத்தில்!

army_slவடக்கு மாகாண சபைத் தேர்தலையும் ஆனைக்கோட்டையில் பொலிஸார் தாக்கப்பட்ட சம்பவத்தையும் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் மீண்டும் துப்பாக்கிகளுடனும் தொலைத் தொடர்பு சாதனங்களுடனும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

குடாநாட்டில் போர்க் காலத்தில் துப்பாக்கிகளையும் தொலைத் தொடர்பு கருவிகளையும் சுமந்த வண்ணம் ரோந்தில் ஈடுபட்டு வந்த பாதுகாப்புப் படையினர் போர் நிறைவுற்றத்தை அடுத்து அவற்றுக்கு ஓய்வு கொடுத்திருந்தனர்.

சுமார் நான்கு வருட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் போர் நடவடிக்கைகள் இப் போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியீட்டிய தையடுத்தும், ஆனைக்கோட்டையில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்கானதையடுத்தும் இராணுவத்தினரின் ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளது.

சீருடையுடன் சைக்கிள்களில் துப்பாக்கி இன்றி நடமாடிய இராணுவத்தினர் தற்பொழுது தொலைத் தொடர்பு கருவிகளை முதுகில் சுமந்த வண்ணம் துப்பாக்கிகளுடன் சைக்கிளில் ரோந்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை,

கடமையிலிருந்த பொலிஸார் மீது இனந்தெரியாதோரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து பொலிஸாரின் நடவடிக்கை என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளதுடன் புலனாய்வுத் துறையினரின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.

சம்பந்தப்பட்டவர்களைக் கண்டுபிடிக்கும் நோக்குடன் கடமையில் ஈடுபட்டுள்ள மானிப்பாய் பொலிஸார் இரவு பகல் என்ற வித்தியாசமின்றி வீதியால் செல்லும் வாகனங்களைத் திடீரென வழிமறித்து சோதனை செய்வதுடன் சந்தேகத்துக்குரியவர்களைத் துருவித்துருவி விசாரணை செய்வதிலும் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த வாரம் ஆனைக்கோட்டை சந்தியில் இரவு நேரம் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர், இலக்கத்தகடு இல்லாத மோடடார் சைக்களில் வந்த இனந்தெரியாதவர்களின் வாள் வெட்டுக்கு இலக்கானார்.
பொலிஸாரை அதிர வைத்துள்ள இந்தச் சம்பவம் குறித்து உஷார் அடைந்த மானிப்பாய் பொலிஸார் வீதியால் செல்லும் வாகனங்களை மூலை முடுக்குகளில் நிறுத்தி வழிமறித்து ஆவணங்களை சோதனை செய்வதுடன் சந்தேகத்துக்குரியவர்களைத் துருவிதுருவி விசாரிப்பதிலும் ஈடுபட்டுள்ளனர்.

Related Posts