Ad Widget

மீண்டும் ஆயுதக்குழுக்கள் உருவாக்க திட்டமா?

தமிழர் பிரதேசங்களில் எங்குமில்லாதவாறு யாழ்ப்பாணத்தில் உருவாகியுள்ள வாள்வெட்டுக் கலாசாரம் தொடர்பில் தமிழ்ப் பிரதிநிதிகள் எந்தக் கருத்தையும் கூறாமல் இருக்கின்றனர். மீண்டுமொரு ஆயுதக்குழுக்களின் செயற்பாட்டை யாழில் கொண்டு வருவதற்காகவா இவ்வாறான சமூக விரோதச் செயல்களுக்கு அவர்கள் துணைபோகின்றனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் தி.துவாரகேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

‘யாழில் நடைபெறும் வாள்வெட்டுக் கலாசாரம் ஏதோவொரு பின்புலத்தில் நடைபெறுகின்றது. அண்மையில் கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களின் குடும்பம், கல்வியில் முன்னிலையில் உள்ள குடும்பம். அப்படியிருக்க எவ்வாறு அவர்கள் இதற்குள் கொண்டு வரப்பட்டனர். அவர்களை ஏவிவிட்டு யாரோ பின்னால் இருந்து செயற்படுத்துகின்றனர்.

இந்தப் பிரச்சினை தொடர்பில் எந்தக் கருத்தும் தெரிவிக்காத தமிழ் அரசியல்வாதிகள், இதனைக் கட்டுப்படுத்த விசேட அதிரடிப்படையினரைப் பயன்படுத்த வேண்டும் என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கூறிய கருத்தை மாத்திரம் விமர்சிக்கின்றனர். இது, நீதிபதியை இடமாற்றம் செய்யும் முயற்சி.

யாழ்ப்பாணம் நீதிமன்றத்தின் மீது கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் திகதி சில விசமிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால், ஒட்டுமொத்த மாணவர்களின் போராட்டமும் கேள்விக்குறியானது. அந்த அனர்த்தத்தைக் கட்டுப்படுத்த இராணுவத்தினரை அல்லது விசேட அதிரடிப் படையினரைப் பயன்படுத்துமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அன்று அரசாங்கத்தைக் கேட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்திலுள்ள பொலிஸார் தொடர்பில் பொலிஸ் முறைப்பாட்டு ஆணைக்குழுவின் 600 முறைப்பாடுகள் உள்ளன. இதனால் விசேட அதிரடிப் படையினரை வைத்து இந்தக் வாள்வெட்டுக் கலாசாரத்தை கட்டுப்படுத்தலாம். அது ஒரு சாதாரண விடயம்.

இந்தச் சமூக விரோதச்செயல்களுக்கு பின்னால், 4 மாகாண சபை உறுப்பினர்களும் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். இவர்களின் துணையுடன் தான் இத்தனையும் நடக்கின்றது. ஆயுதக்குழுக்களை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.

இவற்றைச் சரியான முறையில் கட்டுப்படுத்த இன்னும் ஓரிரு வாரங்களில் முறையான நடவடிக்கைகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எடுப்பார்’ என்றார்.

Related Posts