Ad Widget

மிருக பலியிடுதலை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்!

யாழ்ப்பாணம் – வலி தென்மேற்கு – பண்டத்தரிப்பு – பிரான்பற்று புளியடி வைரவர் ஆலயத்தில் 113 ஆட்டுக் கடாக்கள் பலியிடப்பட்ட விடயமானது, மிகவும் கண்டிக்கத்தக்கதாகும் என, மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

sineeeththambi-yokeswaran

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மிருகவேள்வி என்ற வகையில் யாழ் மாவட்டத்தின் சில ஆலயங்களில் நூற்றுக்கணக்கில் ஆடுகள் வெட்டப்படுவது சைவ மக்களின் பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்களை குழிதோண்டி புதைக்கும் விடயமாகும்.

யாழ்ப்பாணம் சைவ சித்தாந்தத்துடன் பின்னிப் பிணைந்த சமூகத்தை பெரும்பாலாக கொண்டது. சமயத்தாலும், சமய வாழ்வியலாலும் தமிழ் மொழி தொடர்பாலும் இவர்கள் தனித்துவம் மிக்கவர்களாக விளங்குகின்றனர்.

அத்தோடு இத்தனித்துவ பண்பை தாங்கள் வாழும் புலம்பெயர் நாடுகளிலும் பேணி வருகின்றனர்.

இவ்வகையில் ஒரு காலத்தில் மனித பண்புக்கு மாறுபட்டவர்களால் தமது தேவைகளை நிறைவேற்றும் வகையில் அவர்களது உணவாக கொள்ளப்பட்டவைகளை யாகங்களில் ஆவிசுகளாக பலியிட்டு தமது தேவைகளை நிறைவேற்றியது வேத கால வழிபாடாகும்.

இவ்வேதகால வழிபாட்டின் பின் எழுந்த ஆகம கால வழிபாட்டில் உயிர் கொலைகள் நிறுத்தப்பட்டு நீற்றுப் பூசணிக்காய் போன்றவைகளை இதற்கு பதிலாக பயன்படுத்தி யாகங்கள், ஓமங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன.

கிழக்கு மாகாணத்தை பொறுத்த வரை பெரும்பாலும் வேதகால வழிகாடுகள் நடாத்தப்படும் இடமாக உள்ளது. பொதுவாக கிராமிய வழிபாட்டுக்கு பெயர்போனது. இவர்கள் “தெய்வம் ஆடுதல்” என்ற விசேட சடங்கு முறைகள் மூலம் தங்களது கிராமிய வழிபாடுகளை பக்தி பூர்வமாக நடாத்தி வருகின்றனர். இதில் தமிழ் மந்திரங்கள் முதன்மை பெறுகின்றது. இத் தமிழ் மந்திரங்களின் மூலம் பக்தி மார்க்கமாக வழிபாடு நடாத்துகின்றனர்.

சடங்கு என்னும் இவ்வழிபாட்டு முறைகளில் சில இடங்களில் கடந்த காலங்களில் ஒரு சில கோழிகள், ஒரு சில ஆடுகள் பலியிடப்பட்டன.

முன்னாள் கௌரவ இந்து விவகார பிரதேச அபிவிருத்தி அமைச்சரான மட்டக்களைப்பை சேர்ந்த செ.இராசதுரை ஆலயங்களில் மேற்கொள்ளப்படும் இவ் உயிர் கொலைக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டு தடுத்து நிறுத்தினார்.

தற்போது கிழக்கு மாகாணத்தில் ஒரு சில சடங்கு ஆலயங்களில் மாத்திரம் கோழிகள், ஆடுகள் பலியிடப்படுகின்றன. அதையும் விரைவில் தடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சைவத்தை வளர்த்த பெருமக்கள் பலர் பிறந்த யாழ் மண்ணில் வாய் பேசா மிருகங்கள் ஆலயங்களில் வேள்வி என்ற வகையில் பலியிடுவதை யாழ்பாண சைவச் சமூகம் ஏன் விட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது கேள்விக் குறியே? இருந்தாலும் ஒரு சில சைவ அமைப்புக்களும், சைவ பெருந் தொகையினரும் இதற்கு எதிராக குரல் கொடுத்து நடவடிக்கை எடுத்தாலும் பெரும்பாலான மக்கள் இதில் அக்கறை அற்று இருக்கின்றனர்.

இவ்வேளை அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத் திட்டத்திலும் இவ் உயிர் கொலைகளை தடுக்கும் செயற்பாடு போடப்பட்டிருந்தும் இந்து கலாசார அமைச்சு கவனம் செலுத்தாமை வேதனைகளை தருகின்றது. ஒரு பெரிய பிரசித்த பெற்ற ஆலயத்தின் தலைவரும், சைவ பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் வந்த இந்து கலாசார அமைச்சர் இவ்விடயத்தில் உடனடி கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.

அவர் அமைச்சராக இல்லாத வேளை பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் இவ்விடயங்களை கண்டித்தார்.

எமது சைவ சமயத்தின் மேன்மையை பாதுகாக்கும் வகையில் இந்து ஆவணங்களில் மேற்கொள்ளப்படும் மிருக பலியிடுதல் செயற்பாட்டை உடனடியாக நிறுத்த அனைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது சைவத் தமிழரின் தலையாய கடன் என்பதை இவ்விடத்தில் சுட்டிக்காட்டுவதுடன், இம்மிருகப் பலியிடலுக்கு எதிராக அனைத்து நடவடிக்கைக்கும் எனது ஒத்துழைப்பு உண்டு என தெரிவிக்கின்றேன். இதனை தடை செய்ய இயன்ற வரையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதையும் குறிப்பிடுகின்றேன் என இவ்வறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts