Ad Widget

மின்சக்தி அமைச்சின் உயர்மட்டக் குழு எண்ணெய் கசிவு தொடர்பில் ஆராய்வு

மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் வருகை தந்த உயர்மட்டக் குழுவினர், சுன்னாகம் மின்சார நிலையத்துக்கு திங்கட்கிழமை (26) விஜயம் செய்து எண்ணெய் கசிவு விவகாரம் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

சுன்னாகத்தில் அமைந்துள்ள நொர்தன் பவர் நிறுவனத்தால் வெளியேற்றப்பட்ட கழிவு எண்ணெயால், சுன்னாகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள கிணறுகளில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதாகக் கூறப்பட்டதை அடுத்து, அது தொடர்பில் ஆராய்வதற்காக இக்குழு யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளது.

அமைச்சின் திணைக்களப் பணிப்பாளர் சுலக்ஷன் ஜயவர்தன, இலங்கை மின்சார சபையின் அதிகாரி மென்டிஸ் ஆகியோர் தலைமையிலான உயர்மட்டக்குழுவே ஆய்வுகளை மேற்கொண்டது.

சுன்னாகம் மின்சக்தி நிலையத்தில் திங்கட்கிழமை காலை 9.30 மணி முதல் ஆராய்ச்சியில் ஈடுபட்ட அக்குழுவினர், நிலைய பகுதிகளை பார்வையிட்டதுடன், நிலத்தடியில் கழிவு எண்ணெய் உள்ளதா என்பதையும், நவீன முறையில் கண்டறியும் வேலைகள் முதற்கொண்டு தங்களால் செய்யப்பட வேண்டிய அனைத்து விடயங்களையும் காலதாமதமின்றிச் செய்வதாக உறுதியளித்ததாக சுற்றாடல் சூழல் பாதுகாப்பு அமையத்தினர் கூறினர்.

மேற்குறித்த நிறுவனத்தின் மின்பிறப்பாக்கிகள் இயங்குவதற்கு அமைச்சு தடை விதித்ததுக்கமைய மின்பிறப்பாக்கிகள் இயங்காமல் இருப்பதையும் இந்தக் குழுவினர் உறுதி செய்தனர்.

Related Posts