Ad Widget

மாவீரர் துயிலுமில்லங்கள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும்:ரவிகரன்

உறவுகளை நினைவுகூருவதற்காக மாவீரர் துயிலுமில்லங்கள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும் என வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் ரவிகரன் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

நியாயமான ஒரு தீர்வு கிடைக்காத நிலையை முன்னைய ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக ஏற்படுத்திவந்ததனாலேயே, போராடவேண்டிய நிலைக்கு இளைஞர்கள் தள்ளப்பட்டார்கள்.

அத்துடன் அந்தப் பிள்ளைகளை விதைத்த இடத்தில் அவர்களுடைய உறவுகள் வந்து நினைவுகூருவதற்கு சந்தர்ப்பமில்லாத காலமும் இருந்தது.

இப்போது படிப்படியாக நினைவுகூருவதற்கு சந்தர்ப்பங்கள் கிடைத்தாலும் அளம்பில் துயிலுமில்லம் விடுவிக்கப்படவில்லை. துயிலுமில்லத்துக்குள் இருக்கின்ற இராணுவத்தினர் வெளியேறவேண்டும்.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தைப் பொறுத்தவரை தேராவில், இரணைப்பாலை, முள்ளியவளை, அளம்பில், முல்லைத்தீவு நகர்ப்பகுதி, வன்னிவிளாங்குளம் உள்ளிட்ட பல இடங்களில் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டுவருகின்றன.

இருப்பினும் சில இடங்கள் மூடி மறைக்கப்பட்டு, அல்லது மக்கள் நினைவுகூரச் செல்வதைத் தடுத்து இராணுவத்தினர் அழுத்தங்களை வழங்குகின்றனர்.

குறிப்பாக ஆலங்குளம் பகுதி இன்றுவரை விடுவிக்கப்படவில்லை.

எனவே மாவீரர் துயிலுமில்லங்கள் முழுமையாக விடுவிக்கப்பட்டு மக்கள் தமது உறவுகளை நினைவுகூர சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும் என்றார்.

Related Posts