Ad Widget

மாவீரர்களை நினைவுகூரும் உரிமையை வழங்க வேண்டும்!

மாவீரர்களை நினைவு கூரும் உரிமையை வழங்க வேண்டும் என புதிய அரசியலமைப்பு தொடர்பாக கருத்தறியும் அமர்வில் கருத்துகளை முன்வைக்கும் போது முல்லைத்தீவு மக்கள் தெரிவித்துள்ளனர்.

“தமிழ்மக்களின் விடுதலைச் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கு தமிழீழமே சரியான தீர்வு. தமிழீழமா சமஸ்டியா என்னும் கேள்வியுடன் தொடர்ந்தும் காலத்தை வீணாக்கி பிரச்சனைகளுக்கு தீர்வு எட்டப்படாமல் இருப்பதை விடுத்து, வடக்கையும் கிழக்கையும் நிர்வகிக்கக் கூடிய அதிஉச்ச அதிகாரங்கள் தமிழ்மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.” எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த அமர்வில் கலந்து கொண்ட மக்கள் மேலும் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கையில்,

1. போரில் உயிர்நீத்த பொதுமக்கள் மற்றும் மாவீரர்களை மக்கள் அனைவரும் இணைந்து அஞ்சலி செலுத்தும் உரிமையை அங்கீகரிக்க வேண்டும்.

2. காணாமல் போனோர் தொடர்பாக பொறுப்புகூற வேண்டும்.

3. தாய்நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு இனத்தை அழித்துவிட்டு, அதை பெருமைப்படுத்தி வெற்றிவிழா கொண்டாடப்படுவதை நிறுத்த வேண்டும்.

4. 1983ஆம் ஆண்டு இராணுவ முகாங்கள் எங்கு இருந்ததோ மீண்டும் அவ்விடத்திலே அமைத்தல் வேண்டும்.

5. தற்போது உள்ள விகிதாசார பிரதிநிதித்துவ முறையிலான தேர்தல் முறையை நீக்கி தொகுதி ரீதியான தேர்தல் கொண்டு வரப்படவேண்டும்.

6. தகவல் அறியும் சட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இந்த வகையிலேயே புதிய அரசியலமைப்பில் சட்டம் உருவாக்கப்பட வேண்டும்.” என அரசியலமைப்பு தொடர்பாக மக்கள் கருதறியும் குழுவிடம் 60 பேருக்கும் மேற்பட்டோர் குழுக்களாகவும் தனியாகவும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

Related Posts