Ad Widget

மாற்றம் முக்கியம் என்பதை மக்கள் உணர வேண்டும் – கஜேந்திரகுமார்

காலம் காலமாக ஏமாற்றப்படும் நிலையினை மக்கள் புரிந்துகொள்வதோடு மாற்றம் ஒன்று தேவை என்பதை மக்கள் உணர வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முதன்மை வேட்பாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று வியாழக்கிழமை (23), யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ‘தமிழ் அரசியல் மாற்றம் தொடர்பில் மக்கள் விழிப்படைய வேண்டும். இல்லையேல் எமது பிரச்சனைக்கு தீர்வு எட்டமுடியாது. எம் கட்சி தொடர்பாக மக்கள் மத்தியில் பொய் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதனால் கடந்த தேர்தலில் எம்மால் போட்டியிட முடியாமல் இருந்தது. எதையும் தாண்டி எம்மால் உறுதியான பாதையில் செல்லமுடியும் என்பதால் மாகாண சபை தேர்தலை புறக்கணித்தோம்’ என்றார்.

‘முதல் தடவையாக தேர்தலுக்கு முகம் கொடுக்கின்றோம். இதுவரையில் நாம் மக்களுக்கு சொன்ன விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு கிடைத்த ஒரு சந்தர்ப்பமாக இதை நாம் பார்க்கின்றோம். ஆரம்பத்தில் இருந்து நாம் எமது கொள்கையில் இருந்து விலகவில்லை. இரு தேசம் ஒரு நாடு என்பது எமது நிலைப்பாடு இல்லை. அது மக்களின் நிலைப்பாடு. மக்களின் நிலைப்பாடே எமது நிலைப்பாடு.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் புள்ளடி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. ஆகவே தமிழ் மக்களின் புள்ளடியின் முக்கியத்துவத்தை நாம் இதன் மூலம் உணரவேண்டும். எமது இந்த புள்ளடி மூலம் ஆட்சி மாற்றம் நிகழ்த்தப்பட்டது என்றால் ஏன் தீர்வைப்பெறமுடியாது. ஆகவே எமது பிரச்சினைக்கு தீர்வை நாம் எட்டமுடியும். அதற்கு சரியான பாதையினை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்’ என்று அவர் மேலும் கூறினார்.

Related Posts