Ad Widget

மாயக்கல்லி விவகாரத்திற்கு விரைவில் தீர்வு: சிறுபான்மை தலைவர்களிடம் ஜனாதிபதி உறுதி

நல்லிணக்கத்தை குழப்பும் வகையில் மாயக்கல்லி மலையில் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகள் குறித்த உண்மைத் தன்மைகளை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கும் ஜனாதிபதிக்கும் இடையே நேற்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சிறுபான்மை சமூகத்தினர் ஒற்றுமையாக வாழ்ந்துவரும் மாணிக்கமடு பிரதேசத்தில் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான காணியை பலவந்தமாக கைப்பற்றி அங்கு பௌத்த மடாலயம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அது சிறுபான்மை மக்களின் நல்லபிப்பிராயத்தையும் இன நல்லிணக்கத்தையும் குழப்பும் வகையில் அமைந்துள்ளது என சம்பந்தன் மற்றும் ஹக்கீம் ஆகியோர் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினர்.

அதனை தொடர்ந்து அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித பி.வணிகசேகரவுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசிய ஜனாதிபதி, மாயக்கல்லி விவகாரத்தின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து, விரைவில் அதற்கான பரிகாரத்தை பெற்றுத்தருவதாக உறுதியளித்துள்ளார்.

இதேவேளை, இனவாதத்தை பரப்புகின்ற பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் மாயக்கல்லி பகுதிக்கு சென்றுவந்தமையால் அங்கு பதற்றநிலை மேலும் அதிகரித்துள்ளதாகவும் சிறுபான்மை தலைவர்கள் எடுத்துரைத்திருந்த நிலையில், ஞானசார தேரர் சென்றமை தொடர்பில் ஜனாதிபதியும் தனது அதிருப்தியை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts