Ad Widget

மாநகர சபையின் நடவடிக்கையில் முதலமைச்சர் தலையிட வேண்டும் – விஜயகாந்

sunthrsing-vijayakanthயாழ்.மாநகர சபையின் நடவடிக்கைகளில் வடமாகாண முதலமைச்சர் தலையிட்டு ஊழல் விடயங்களை ஆராய வேண்டுமென யாழ்.மாநகர சபை உறுப்பினர் சுதர்சிங் விஜயகாந் நேற்று தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

வேலைவாய்ப்பிற்காக ஏங்கும் தொழிலாளர்களை ஏமாற்றும் செயற்பாட்டில் யாழ்.மாநகர சபை நிர்வாகம் இறங்கியுள்ளது.

புதிய நடைமுறையில் உள்ளவாறு வேலைவாய்ப்பு வழங்கப்படுமென்று யாழ். மாநகர ஆணையாளர் தெரிவித்துள்ளமையினால் யாழ்.மாநகர சபையிலிருந்து இடைநிறுத்தப்பட்ட 39 தொழிலாளர்களுக்கும் வேலைவாய்போ, நிரந்தர நியமனமோ கிடைக்குமென்பதில் எந்த உறுதியும் இல்லை.

எனவே, மாநகர சபையின் செயற்பாடுகளை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலையிட்டு 39 தொழிலாளர்களுக்கும் வேலை வாய்ப்புக்கள் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அதேவேளை, யாழ்.மாநகர முதல்வர், கடந்த 3 மாதங்களாக பொதுக் கூட்டத்தினை நடத்தாது தன்னிச்சையாக செயற்பட்டு வருவதுடன் அதற்கு ஆணையாளர் மற்றும் செயலாளர்களும் உடந்தையாக இருக்கின்றார்கள்.

பொதுக் கூட்டத்தினை நடத்தாமலும் நிர்வாகத்தினை சரியான முறையில் மேற்கொள்ளத் தெரியாமலும் மாநகர முதல்வர் தடுமாறுகின்றார்.

இந்நிலையில், மாநகர சபையினை கலைப்பது மேலானது. இந்த விடயத்தில் முதலமைச்சர் தலையிட்டு தீர்வு காண வேண்டும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts