Ad Widget

மாநகரசபை தொழிலாளர்களின் கோரிக்கைக்கு யாழ் பல்கலை ஊழியர் சங்கம் ஆதரவு

இது தொடர்பில் அவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கை வருமாறு
muninci-strikeநிரந்தர நியமனம் வேண்டி யாழ் மாநகரசபை தொழிலாளிகள் கடந்த ஏழுநாட்களாக போராடிவருகின்றனர். இவர்களது இந்த போராட்டமானது சாதகமான முறையில் பரிசீலிக்கப்பட்டு விரைந்து நியாயமான தீர்வொன்றினை வழங்குவதற்கு மாநகரசபையும் மாகாணசபையும் இதய சுத்தியுடன் முன்வரவேண்டும் என எமது ஊழியர்சங்கம் விரும்புகின்றது.
மாநகரசபையில் சுத்திகரிப்பு மற்றும் வேலைப்பகுதி ஆகியதுறைகளில் ஏழு வருடகாலப்பகுதிக்கும் மேலாக தற்காலிகத் தொழிலாளராகப் பணியாற்றிவரும் 200வரையான ஊழியர்கள் நிரந்தர நியமனத்தை கோரியுள்ளனர். இவர்கள் இக்கோரிக்கையினை விடுப்பது அல்லது போராடுவது இது முதல் தடவையல்ல இதற்கு முன்னரும் போராடி வாக்குறுதிகள் வழங்கப்பட்டு ஏமாற்றப்பட்டுள்ளார்கள்.
யாழ் மாநகரமானது வளர்ச்சி கண்டு வருகின்ற ஒருபெருநகரமாக மாறி வருகின்றமையும் நாள் தோறும் லட்சக்கணக்கான மக்கள் சுற்றுலா பயணிகளாகவும் தமது தேவைகளிற்காகவும் மாநகரத்தினுள் வந்துசெல்கின்றனர். விடுதிகள், தங்குமிடங்கள், உணவகங்கள், மற்றும் வர்த்தக நிலையங்கள் என்பன மாநகரப் பகுதிக்குள் பல்கிப்பெருகியுள்ளன. இவற்றிலிருந்து பெருமளவான வருமானமும் மாநகரசபைக்கு கிடைக்கின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது. எனவே இவ்வெல்லைக்குட்பட்ட பகுதிக்குள் கழிவகற்றல் மற்றும் புனரமைப்பு வேலைகளிற்கான தேவை மற்றும் அளவு முன்னைய காலப்பகுதிகளை விடவும் தற்போது பன்மடங்கு அதிகரித்துள்ளமை யாவரும் அறிந்ததே.
இத்தேவைகளின் அதிகரிப்பிற்கு ஏற்றவாறு இவ்வேலைகளை ஆற்றும் நிரந்தரப் பணியாளர்களின் எண்ணிக்கையினை காலாகாலத்திற்கு அதிகரித்தல் அவசியமாகும். தேவையின் பொருட்டே இவ்வளவு தற்காலிக தொழிலாளரும் இணைக்கப்பட்டுப் பணியாற்றிவருகின்றரெனவே கருதுகின்றோம். அத்துடன் இப்பணியாளர்கள் போதிய உதவுகருவிகளோ, பாதுகாப்பு உபகரணங்களோ இன்றியே இவற்றை ஆற்றிவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களில் அரசியல்வாதிகளால் அரச அதிகாரிகளின் துணையுடன் இரு தரப்பினதும் தனிப்பட்ட நலன்களுக்காக நடைமுறைகளிற்கு மாறாக மாநகரசபை உட்பட பல அரச நிறுவனங்களில் இவ்வாறான பணியாளர்கள் உள்ளீர்க்கப்பட்டுள்ளனர் என்பதையும் அனைவரும் அறிவர். எனினும் அப்பணியாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் எதிர்காலம் கருதி அவர்கள் பாதிக்கப்படா வண்ணம் அவர்களுக்கு உரிய தகமைகள் இருப்பின் அந்நிறுவனங்களில் நிரந்தர நியமனங்கள் வழங்க அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும். அவ்வாறு தேவைக்கு அதிகமாக உள்ளீர்க்கப்பட்டுள்ளனர் என தீர்மானிப்பின் அதற்குக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
இங்கு போராடுவோர் யாரும் அலுவலங்களில் தமக்கு அலுவலக பதவிகளோ, பதவியுயர்வோ, கோரிப் போராடவில்லை மாறாக தமக்கு நிரந்தர தொழிலாளி நியமனம் வேண்டியே போராடுகின்றனர். அதுவும் வழமை போன்று வாக்குறுதிகள் வழங்கி ஏமாற்றாமல் நம்பகமான உறுதிப்பாடு ஒன்றினை வேண்டுகின்றனர்.
இவர்களது போராட்டம் காரணமாக யாழ் மாநகரப்பகுதிக்கு உட்பட்ட உணவகங்கள், வர்த்தக நிலையங்கள், மற்றும் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதோடு நெருக்கடிகளிற்கும் உள்ளாகின்றனர். எனவே இவர்களின் கோரிக்கையினை சாதகமாக தீர்ப்பதற்கு உடனடிநடவடிக்கை அவசியமாகின்றது. அவர்களின் பிரச்சினை தீர்க்கப்படுமாயின் அவர்கள் தமது கடமையினை ஆற்றுவதற்கும் அவசரகாலநிலையில் பணியாற்றி தேங்கியுள்ள கழிவுகளை சிலதினங்களில் அகற்றுவதற்கும் தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர்களது கோரிக்கை நியாயமானது எனவே இந்த போராட்டத்தை சாதகமான முறையில் அணுகி விரைந்து தீர்வுகாண தொழிற்சங்கம் என்றவகையில் நாம் இது தொடர்பிலான சகலதரப்பினரிடமும் கோரிக்கைவிடுப்பதோடு, அவர்களின் போராட்டத்திற்கு எமது ஆதரவினையும் தெரிவிக்கின்றோம்.
– யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கம்

Related Posts