Ad Widget

மாதகலில் மீன்பிடிக்க தடை

மாதகல் (ஜம்புகோளப்பட்டினம்) கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு கடற்படையினர் முற்றாக தடை விதித்துள்ளனர் என்று கங்காதேவி மீன்பிடி சமாசம் தெரிவித்தது.

இருப்பினும், இந்த செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என்று கடற்படை குறிப்பிட்டது.

சுழிபுரம், காட்டுப்புலம் பகுதியைச் சேர்ந்த 115 மீனவக் குடும்பங்கள், மாதகல் (ஜம்புகோளப்பட்டினம்) கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டு வந்தனர். எனினும், ஜம்புகோளப்பட்டினம் பகுதியில் சங்கமித்தை வந்திறங்கிய அடையாளமாக பௌத்த ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டது.

இதனால் அப்பகுதி புனித பிரதேசமாக அறிவிக்கப்பட்டு, பௌத்த ஆலயம் அமைந்துள்ள இடத்தை சூழவுள்ள 2 கிலோமீற்றர் தூரத்திற்கு மீன்பிடிப்பதற்கு கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் தடை விதிக்கப்பட்டது.

இதனையடுத்து, புனித பிரதேசம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் காட்டுப்புலம் மீனவர்கள், மீன்பிடியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், பொன்னாலை பகுதியிலிருந்த கடற்படை முகாம் ஒன்று தற்போது ஜம்புகோளப்பட்டினத்தை அண்மித்த திருவடிநிலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அப்பிரதேசமெங்கும் மீன்பிடிக்க வேண்டாம் என மீனவர்களுக்கு கடற்படையினர் அறிவித்துள்ளதுடன், மீனவர்கள் கடலில் போட்டிருந்த மீன்பிடி படுகைகளையும் அகற்ற உத்தரவிட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், இந்த செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என்று தெரிவித்த கடற்படையின் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய, ஜம்புகோளப்பட்டின கடற்பரப்பில் மீன்பிடிக்க வேண்டாம் என அறிவிக்கவில்லை என்றும் கூறினார்.

அத்துடன், கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால், குறித்த பிரதேசத்தை புனித பிரதேசமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், அது தொடர்பில் இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என்றும் கடற்படையின் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

Related Posts